பகுதி 2
திரைவார்
“மால்வரை மாதுமையாள் தரு மணியே குகனே
என அறையா அடியேனும் உன் அடியாராய்
வழிபாடுறுவாரொடு அருள் ஆதரமாயிடு
மகநாள் உளதோ சொல அருள்வாயே”
“அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே!”
இமயமலை மாது உமையாள் பெற்ற மணியே! குகனே! என்று ஓதி அடியேனும் உன்னுடைய அடியாராய் வழிபாடு செய்வார்களோடு அருளன்புடன் ஒன்று கூடுகின்ற சிறப்பான நாள் ஒன்று உண்டோ? அழகுமிக்க மயிலாப்பூரில் வீற்றிருக்கும் பெருமாளே!
நிரைதருமணி
இப்பாடலில்,
“பரை, அபிநவை சிவை சாம்பவி உமை
அகிலமு அருள் அருளேய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல்மறை சதகோடி
பகவதி இருசுடர் ஏந்து காரணி
மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி
படர் சடையவன் இடம் நீங்குறாதாள்”
– என்று அம்பிகையின் நாமங்களைக் குறிப்பிடுகிறார்.
பரை – பராசக்தி; அபிநவை – சிவத்தினின்றும் பிரிவுபடாதவள்; சிவை – சிவைபத்தினி; சாம்பவி – சம்புவின் சக்தி; உமை; அகிலமு அருள் அருளேய்ந்த கோமளி – எல்லா உலகங்களையும் படைத்தருளிய அருள் கொண்ட அழகி; பயிரவி – பைரவரது பத்தினி; திரிபுரை – மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள்; ஆய்ந்த நூல் மறை சதகோடி பகவதி – நூற்றுக்கணக்கான நூல்களும் வேதங்களும் ஆய்ந்துள்ள பகவதி; இருசுடர் ஏந்து காரணி – சந்திர சூரியனிடையே எழுந்தருளியிருக்கும் அம்பிகை [இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – அபிராமி அந்தாதி]; விதார்ந்த மோகினி – பலவித அழகிய உருவங்கள் உடையவள்; படர் சடையவன் இடம் நீங்குறாதாள் – படர்ந்த ஜடை உடைய சிவனது இடப்பாகத்தில் நீங்காது உறையும் அம்பிகை.
வருமயிலொத்தஇப்பாடலில் முருகனைப் பலவிதமாக விளித்துப் போற்றுகிறார்.
“வேதாவே தொழு திரு நடமிட்டவர் காதே மூடிய
குருபோதம் உரை செயும் உத்தம வீரா”
பிரமனே தாளம் போட்டுத் தொழுகின்ற அழகிய நடனம் செயும் சிவனுடைய செவிகளை அவர் கவனத்துடன் உபதேசம் பெற வேண்டி, மடக்கி மூடிக் கேட்க வைத்த குரு மூர்த்தியாய், ஞானோபதேசம் செய்த மேலான வீரனே!
“நாரணி, உமையவள், உத்தர பூர்வாகாரணி
உறு ஜகரக்ஷணி நீராவாரணி தரு கோவே”
– என்று இப்பாடலில் மேலும் அம்பிகையின் நாமங்களைப் பாடுகிறார்.
நாரணி – உமையவள்; உத்தர பூர்வ காரணி உறு – வடக்கு, கிழக்கு திசைகளின் மூல தேவதையாக விளங்கும்; ஜகரக்ஷணி – உலகை ரக்ஷிப்பவள்; நீர் ஆவாரணி தரு கோவே – திரோதான சக்தி உடைய சத்தி ஈன்ற குழந்தையே!
[ஆன்மாக்களுக்கு சிவசக்தி பக்குவம் வரும் வரை மறைப்புச் சக்தியாக நின்று உதவுபவள் – இதையே திரோதான சக்தி என்பர்]
“தரு பர உத்தம வேளே, சீருறை
ஆறுமுக, நல்தவ லீலா, கூர் உடை
அயில் உறை கைத்தல, சீலா, பூரண, பரயோக
சரவண, வெற்றி விநோதா, மாமணி
தரும் அரவைக் கடி நீதா ஆம் அணி
மயிலுறை வித்த, உன் ஆதாராம் அணி பெறுவேனோ”
– என்று பாடுகிறார்.
தரு பர உத்தம வேளே – திருவருளைத் தரும் மேலான உத்தமனே! வேளே!
சீர் உறை அறுமுக – பெருமை மிக்க ஆறுமுகனே!
நல் தவ லீலா – நல்ல தவ விளையாடல்களை உடையவனே!
கூருடை அயிலுறை கைத்தல – கூர்மை ஒண்ட வேலைப் பிடித்த கரத்தனே!
சீலா – தர்ம மூர்த்தியே!
பூரண – பரிபூர்ண மூர்த்தியே!
பரயோக – மேலான யோக மூர்த்தியே!
சரவண – சரவணப் பொய்கையில் தோன்றியவனே!
வெற்றி விநோதா – வெற்றியையே பொழுதுபோக்காகக் கொண்டு விளையாடல் புரிபவனே!
மாமணி தரும் அரவைக் கடி நீதா ஆம் அணி மயிலுறை வித்தக!
உயர்ந்த மணியைத் தரும் பாம்பை அடக்குகின்ற நீதி வாய்ந்த அழகிய மயில் மேல் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே! என்றெல்லாம் பலவாறாக விளிக்கிறார்.
பாடல் இறுதியில் பின் வருமாறு பாடுகிறார்:
உயர்வர முற்றிய கோவே! ஆரண
மறை முடி வித்தக! தேவே! காரண!
ஒரு மயிலைப் பதி வாழ்வே! தேவர்கள் பெருமாளே!
[மேலான வரங்கள் நிரம்பத் தரும் தலைவனே! வேத உபநிடதங்களின் முடிவில் விளங்கும் ஞான பண்டிதனே! தேவனே! மூலகாரணப் பொருளே! ஒப்பற்ற மயிலைத் தலத்தில் வாழ்பவனே! தேவ தேவாதியர் தம்பிரானே!]
சைவ அகச் சமயங்கள் ஆறு. அவை
1.பாசுபதம்
2.மாவிரதம்
3.காபாலிகம்
4.வாமம்
5.வைரவம்
6.ஐக்கியவாதம்
என்பன.
காபாலிகம், மண்டை ஓட்டில் உணவினை ஏற்றுக்கொண்டு, கைகளில் பச்சை நிறக் கொடிகளை ஏந்தி, சிவனை வழிபட்டு உய்தி பெறலாம் என்று கூறும் மார்க்கம். காபாலிகள் நரபலி, மது அருந்தல் இவற்றை வழக்கத்தில் கொண்டுவந்தனர். ஆனால் ஆதிசங்கரரும், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரும் சைவத்தை அன்புச் சமயமாகவும் உயிர்ப்பலி இல்லாத கருணை நெறியாகவும் மாற்றப் போராடியதால், காபாலிகம் மெல்ல மெல்ல வீழ்ச்சி அடைந்தது. தென்னாட்டில் கபாலிகளின் பெயரைச் சொல்லி நிற்கும் ஆலயம் – திருமயிலை கபாலீச்சரம். ஆனால் இன்று சைவ சித்தாந்தத்தின் சிறப்பைப் பேசும் அன்புத் திருக்கோயிலாக விளங்குகிறது.
சிங்காரவேலனைப் பாமாலைகளால் தொழுதேத்தி கோயிலை வலம் வந்து, பழநி ஆண்டவன், வாயிலார் நாயனார், நக்ஷத்திர மரங்கள், கற்பகாம்பாள், கபாலீசுவரர் (இங்கு நுழையும் முன், சிறிய விநாயகர் திருமேனி இருக்கும். அதற்கு அடியில் கைத்தல நிறைகனி திருப்புகழ் பளிங்குக்கல்லில் பொறிக்கப்பட்டு, சுவரில் பதிக்கப்பட்டுள்ளது), நந்திகேசுவரர், கொடிமரம், சம்பந்தப்பெருமான், பூம்பாவை, தனிச்சந்நிதியில் சனைச்சரர், மயில் உருவில் அம்பிகை சிவனைப் பூஜிக்கும் சந்நதி, சுந்தரேசுவரர், நவக்கிரகங்கள், கோசாலை, ஜகதீசுவரர் அனைவரையும் வலம் வந்து, மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் ஆசை மிகுதியினால் கூத்தாடு விநாயகரையும் வணங்கி, கோயிலை விட்டு வெளியே வருகிறோம்.
கங்காளற்கு உபதேசித்த கந்த காங்கேயனே போற்றி
நம் காதலாம் பிராண நாயகா போற்றி போற்றி
சங்கார சூர சங்கார
அந்தகா போற்றி போற்றி
சிங்கார மாமயூரச் சிங்கார வேலா போற்றி
[அமிர்தலிங்கத் தம்பிரான் அருளிய திருமயிலை தலபுராணம்]
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க்
கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
சித்ரா மூர்த்தி
The post திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்-திருமயிலை appeared first on Dinakaran.