26.4.25 சனி-ஸ்ரீரங்கம் தேர்
விஜயநகர பேரரசின் இரண்டாம் ஹரிஹரன் புதல்வரான விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸவம். கி.பி.1371ல், நாற்பத்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வடதேசத்தவர்களின் 13ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கம் அந்நிய ஆதிக்கத்தால் பாதிப்படைந்தது. பிள்ளை லோகாச்சாரியார் அந்திம காலத்தில் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்ற அரங்கன், பல வருடங்கள் கழித்து ஸ்ரீரங்கம் திரும்பினான். ஆனால் கர்ப்பகிரஹமும் மற்றைய மண்டபங்களும் பாழடைந்த நிலையில் இருந்தது.
அவற்றை எல்லாம் விருப்பண்ண உடையார் காலத்தில் சீரமைக்கப்பட்டன. பின்னர் கி.பி.1383ல், அதாவது 60 ஆண்டுகளுக்குப்பிறகு உற்சவம் கண்டருளினார். விருப்பண்ண உடையார் 51கிராமங்களை தர்மமாகத் தந்தார். இந்தப் பெருவிழா பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கிராமத்தை குத்தகைக்கு விடுவதாக பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும். மேலும், தேர் அன்று, மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த தான்யங்களையும், பசுமாடு, கன்றுகளையும் நம்பெருமாளுக்குக் காணிக்கையாக கோயில் கொட்டாரத்தில் சேர்ப்பர். மேலும், தேரடியிலும், கோயில் கொடிமரத்தின் அடியிலும் தேங்காய்களை உடைத்துக் கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சித்திரை தேருக்கு முதல் நாள் காலையில் நம்பெருமாள் வெள்ளிக் குதிரையில் வீதிவலம் வருவதை “குதிரை வாகனமேறி மன்னர்கள் பலரும் புரிய ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த ஆபர ணங்களை அணிந்து கொண்டு கஸ்தூரி ரெங்கராஜா பவனி வருகிறார்!! வணங்குவோம் வாரீர்!! “எனப் புலவர்கள் வாழ்த்துவர்.
“அரங்கநாதன் குதிரை மீதேறி பவனி வருவதே தனி அழகு. கடிவாளத்தை பிடித்து அமர்ந்து இருக்கும் ஒய்யாரம், புன்சிரிப்பு, மக்களை நலம் விசாரிக்கும் முறை, தேரைப் பார்வை இடும் முறை, இவையாவும் அயோத்தியில் சக்கரவர்த்தித் திருமகன் அரச வீதி உலா வருவது போல இருக்கும்’’ என்று மற்றொரு புலவர் பாடுகிறார்.
மாலையில் தங்கக் குதிரையில் வீதிகள் வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்த பிறகு, நான்முகன் கோபுரவாயிலில் அமுது படைக்கப்படும். விஜயநகர சொக்கநாத நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் திருஷ்டி கழிக்க திருவந்திக்காப்பு ஆகும். பின்னர் வாகன மண்டபத்தில் படிக்களைந்து, நம்பெருமாள் முன்னர் கார்த்திகை கோபுரவாசலில் திவ்யப்பிரபந்தம் சாத்து முறை ஆகும். அதன்பின் நம்மாழ்வார் சந்நதியில் இயற் பா சாற்று முறை ஆகும். நம்பெருமாள் ரக்சாபந்தனம் செய்து கொண்ட பின் விழா முடிந்து தீர்த்தவாரி வரை கண்ணாடி அறையில் எழுந்தருளி இருப்பார். காலைப் புறப்பாடு மற்றும் மாலை புறப்பாடும் பெருமான் திருமேனியில் வெயில் படாவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
ஏழாம் திருநாள் அன்று, நெல் அளவை அன்று கோயில் முறைகாரர் (காரளப்பான்) திருவரங்கம் ஒன்று, பெரிய கோயில் இரண்டு, மூன்று என்று தங்க மரக்காலால் அளவு சொல்லி நெல் அளப்பார். இவ்வளவு பெருமை கொண்ட அரங்கன் விருப்பன் திருநாளில் இன்று (26-4-2025), சித்திரைத் தேர்.
27.4.2025 – ஞாயிறு வடுகநம்பி திருநட்சத்திரம்
வைணவ ஆச்சாரியர்களில் சித்திரை அஸ்வினி நட்சத்திரத்தில் அவதரித்தவர் வடுகநம்பி. கர்நாடகாவில் உள்ள சாளகிராமம் என்ற ஊரில் அவதரித்தார். ஸ்ரீரங்கத்தை விட்டு மேல்நாடு எனப்படும் திரு நாராயணபுரத்திற்கு ராமானுஜர் சென்ற பொழுது, அவருடைய சீடரான முதலியாண்டான் மூலம் ராமானுஜருக்கு சீடரான இவருக்கு ஆந்திர பூர்ணர் பெயர். ஆச்சாரிய பக்தியில் ஈடு இணையற்றவர். ராமானுஜரிடம் சகல கலைகளையும் கற்றவர். எல்லோரும் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யும் பொழுது வடுக நம்பிகள் ராமானுஜரின் திருவடி நிலைக்கு திருவாராதனம் செய்வார். ஒருமுறை ராமானுஜர் தீர்த்தயாத்திரை புறப்பட்ட போது அவருடைய திருவாராதனப் பெருமாளோடு, இவர் பூஜிக்கும் ராமானுஜரின் திருவடி நிலையையும் சேர்த்துக் கட்டி தலையில் தூக்கிச் சென்றார். மூட்டையை அவிழ்த்த பொழுது ராமானுஜர் வணங்கும் பெருமாளோடு பாதுகையும் இருந்ததைக் கண்டு ராமானுஜர் கோபத்தோடு கடிந்து கொள்ள மிகவும் சாந்தமாக பதில் சொன்னார். “உங்களுடைய திருவாராதனப் பெருமாளுக்கு நம்முடைய திருவாராதன பெருமாள் (பாதுகை) குறைவு இல்லாதவர்’’
ராமானுஜர் பெருமாளை அங்குலம் அங்குலமாக அனுபவிக்கச் செல்லும் பொழுது இவர் பெருமாளைப் பார்க்காமல் பெருமாளை அனுபவிக்கும் ராமானுஜரை அனுபவிப்பாராம். ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் (ராமானுஜரின்) பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.
28.4.2025 – திங்கள் சிறுத்தொண்டர் குருபூஜை
சைவ சமயத்தின் மிகச் சிறந்த பக்தர்களை நாயன்மார்கள் என்று அழைப்பார்கள். இந்த வரிசையில் 63 நாயன்மார்கள் உண்டு. அவர்களில் ஒருவர் சிறுத்தொண்ட நாயனார். பெயர்தான் சிறு தொண்டரே தவிர இவர் பெருந் தொண்டர் என்று போற்றத்தக்க வகையில் தன்னுடைய ஒரே மகனையே பக்தியின் அதிகபட்ச ஈடுபாட்டில் பலி கொடுக்கத் தயங்காதவர். அதனால்தான், கோடி கோடியான செல்வங்களைத் துறந்துவிட்டு, மானத்தை மறைக்கும் முழத் துண்டோடு வெளியே வந்த திருவெண்காடர் எனும் பட்டினத்தார், தன்னுடைய பாடலில் வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன் என்று சிறுதொண்ட நாயனாருக்கு இணையான பக்தி வேறு யாருக்கும் இல்லை என்று பாடினார். காவிரி வளநாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர்.
பரஞ்சோதியார் என்பது இயற்பெயர். வீரத்திலும் ஈரத்திலும் வல்லவர். நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய் போர்முனையில் பகையரசர்களை வெற்றி கொண்டவர். இவர் வாதாபி நகரத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பலவகை செல்வங்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கைப்பற்றினார். பிறகு அப்பதவியை விட்டுவிட்டு சிவத் தொண்டுக்குத் திரும்பினார். திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார்.
அங்கு கணபதீச்சரத்து இறைவனை இறைஞ்சி வணங்கி சிவ தொண்டுகளை தவறாது செய்து வந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். இவருக்கு ஒரே மகன் சீராளன். தினசரி அடியார்களுக்கு உண வளிப்பதைக் கடமையாகக் கொண்ட இவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவரைத் தேடி வந்து பிள்ளைக் கறியமுது கேட்க அதையும் தயங்காமல் தரமுயல சிவபெருமான் காட்சி தந்தார். இவருடைய குருபூஜை மிக விசேஷமாக திருச்செங்காட்டங்குடியில் நடைபெறும். இது தவிர தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இந்த குருபூஜை நடைபெறும். அன்று அடியார்களுக்கு மிகச் சிறந்த அன்ன தானம் வழங்கப்படும். இந்த அன்னதானத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பிள்ளையில்லாக் குறைதீரும் என்பதால் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்கள் இந்த குருபூஜையில் கலந்து கொள்வார்கள்.
29.4.2025 – செவ்வாய் உய்யக்கொண்டார் நட்சத்திரம்
வைணவத்தில் ஆழ்வார்கள் வரிசை என்று ஒரு வரிசையும் ஆச்சாரியர்கள் வரிசை என்று ஒரு வரிசையும் உண்டு. ஆழ்வார்கள் வரிசையை குரு பரம்பரை என்பார்கள். அதில் முதல் ஆச்சாரியர் நம்மாழ்வார். அவருக்குப் பின் நாதமுனிகள். நாத முனிகளுக்குப் பின் ஆளவந்தார். ஆளவந்தாரின் பிரதான சீடர்தான் உய்யக்கொண்டார். திருவரங்கம் பக்கத்தில் உள்ள திருவெள்ளறை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் அதனால் அந்தப் பெருமாளின் பெயரே இவருக்கு அமைந்தது (புண்டரீகாட்ஷர்) நாதமுனிகள் தமது சீடரான உய்யக் கொண்டாரிடம் “உனக்கு ஆழ்வார்களின் தமிழ் வேண்டுமா? அல்லது பகவானை நெஞ்சில் பார்க்கக்கூடிய யோக சாஸ்திரம் வேண்டுமா? எதை நான் சொல்லித் தருவது?’’ என்று கேட்ட பொழுது இவர் சற்றும் தயங்காமல் “யோக சாஸ்திரம் என்னுடைய ஆத்மாவை மட்டும் உயர்த்தும். ஆழ்வாரின் தமிழ் பாசுரங்கள் உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் உயர்த்தும். பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்று கூறினார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் “அறியாமையால் பலரும் இந்த சம்ஸாரத்தில் இருந்து கஷ்டப்பட, அடியேன் மட்டும் எப்படி தனியாக பகவத் அனுபவம் பண்ணமுடியும்” என்று கேட்டார்.
ஆகையினால் எனக்கு அருளிச் செயலையே சொல்லித் தாருங்கள் என்று கேட்டார். இப்படி ஆழ்வாரின் ஈரத் தமிழைக் கேட்டு, பின்னால் வருகின்ற ஆச்சாரியர்களின் மூலமாக உலக மக்களுக்குப் பரப்பும் தொண்டினைச் செய்த உய்யக்கொண்டாரின் திருநட்சத்திரம் இன்று.
29.4.2025 – செவ்வாய் மதுரை மீனாட்சி அம்மன் விழா தொடக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா 2025ஆம் ஆண்டு ஏப்ரல், 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். மே 10 ஆம் தேதி வரை விழா நடைபெறும். முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மே, 6ஆம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே, 8ஆம் தேதி, திருத்தேரோட்டம் மே, 9ஆம் தேதி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வுகள்:
கொடியேற்றம்: ஏப்ரல், 29.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்: மே, 6.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: மே, 8. திருத்தேரோட்டம்: மே, 9.
விழாவின் நிறைவு: மே, 10.
30.4.2025 – புதன் அட்சய திருதியை
சித்திரை மாதத்தின் வளர்பிறையில் மூன்றாவது நாளில் அட்சய திருதியைக் கொண்டாடப்படுகிறது. சகல செல்வங்களையும் ஞானங்களையும் அள்ளித்தரும் அற்புதம் வாய்ந்த நாள் அட்சய திருதியை. அட்சயம் என்றால் குறைவில்லாதது என்று பொருள். இன்று எந்த காரியம் செய்தாலும் அது குறையில்லாமல் வளரும் என்பதால், கல்வி கற்றல், கிரகப் பிரவேசம் செய்தல், குடை, செருப்பு, விசிறி, தண்ணீர், அன்னம் என தானம் தருதல், புதிய பொருள்களை வாங்குதல் முதலிய சுபகாரியங்களைச் செய்வது சிறந்தது. இன்று பல கோயில்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறும்.
30.4.2025 – புதன் மங்கையர்க்கரசி குருபூஜை
63 நாயன்மார்களில் சில பெண் நாயன்மார்களும் உண்டு அதில் ஒருவர் மங்கையர்கரசி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே
மங்கையர்கரசி என்பது ஞானசம்பந்தர் தேவாரம். சோழ நாட்டில் பிறந்து பாண்டிய மன்னனை மணந்து சமணத்தில் திரும்பிய அந்த மன்னனை சைவத்திற்கு மடைமாற்றம் செய்து பெரும் தொண்டாற்றியவர். அவர் குருபூஜை இன்று.
*27.4.2025 – ஞாயிறு – சர்வ அமாவாசை.
*30.4.2025 – புதன் – பலராம ஜெயந்தி.
*2.5.2025 – வெள்ளி – ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி.
*2.5.2025 – வெள்ளி – ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி.
*2.5.2025 – வெள்ளி – விறல் மிண்ட நாயனார் குருபூஜை.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.