நெல்லை – அம்பை சாலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலையை சீரமைக்க வேண்டும்

*மமக வலியுறுத்தல்

நெல்லை : நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் தருவை பகுதியில் திடியூர், அம்பை சாலை பிரிவில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குண்டு, குழி சாலையை சீரமைக்க வேண்டும் என மமக வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் காஜா, நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு அளித்த மனு:

நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரத்துக்கு செல்லும் சாலையில் தருவை பகுதியில் அம்பை சாலையில் இருந்து திடியூர் செல்லும் சாலை பிரிவு அமைந்துள்ளது. இந்த சாலை பகுதி அபாயகரமான வளைவு கொண்டுள்ளது.

இச்சாலையில் தினமும் நெல்லையில் இருந்து அரசு, தனியார் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் தருவை, பிராஞ்சேரி, மேலச்செவல், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கும், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் தருவையிலிருந்து பிற கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக அம்பை சாலையில் இருந்து திடியூர் செல்லும் சாலை பிரிவில் ராட்சத குடிநீர் குழாய் பதிப்பதற்காக அம்பை மெயின் சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மிகப் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சாலைகள் வளைவு பகுதியாக உள்ளது.

ஆகவே எதிர், எதிர் வரும் வாகனங்கள் சாலையை உடைத்து குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள வளைவுப்பகுதியில் சாலையின் இடதுபுறத்தில் மிகப்பெரிய ராட்சத பள்ளங்கள் உள்ளன. இரவு நேரத்தில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் சாலையில் உள்ள பள்ளத்தை கடக்கவும், திடீர் பிரேக்குகள் போடும் போது விபத்துகள் ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதில் பகல் நேரத்தில் கூட பலர் தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட தருவை அம்பை ரோட்டின் குண்டு, குழிகளை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டுள்ள ராட்சத பள்ளங்களை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post நெல்லை – அம்பை சாலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: