சென்னை, ஏப்.22: புறநகர் ஏசி ரயில்களை எந்த நேரத்தில் இயக்கலாம், என பயணிகள் வாட்ஸ்அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. புறநகரில் இருந்து சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இன்றி வந்து செல்ல புறநகர் மின்சார ரயில் பிரதானமாக உள்ளது. இதனால், சென்னை மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனை ஏற்று பயணிகள் வசதிக்காக ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே கடந்த 19ம் தேதி ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது. ஆனால், இந்த ஏசி ரயில் சேவை கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதால் இதை குறைக்க வேண்டும் என்றும், வெயில் நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, ஏசி ரயில் நேர அட்டவணை குறித்து பயணிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஏசி மின்சார ரயில் நேர அட்டவணை குறித்து ரயில் பயணிகள் தங்கள் கருத்துகளை 6374713251 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பலாம். தெற்கு ரயில்வேயின் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து சிறப்பான ரயில் சேவை வழங்க உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: ஏசி மின்சார ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பயணிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கட்டணம் குறித்து ஒரு சிலரே கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரயில் நேரம் குறித்து பயணிகள் தங்களது கருத்துகளை வழங்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாலை 3.40க்கு இயக்கப்படும் ஏசி மின்சார ரயிலை வெயில் அதிகமாக காணப்படும் நேரமான மதியம் 2 அல்லது 2.30 மணிக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளோம். மேலும், தெற்கு ரயில்வே சார்பில் 4 பேர் கொண்ட குழு நேரடியாக பயணிகளிடம் கருத்து கேட்டு வருகிறது. இந்த குழு சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை சென்று பயணிகளிடம் கருத்து கேட்கும். இவ்வாறு தெரிவித்தார்.
கட்டணத்தை குறைக்க தெற்கு ரயில்வே மறுப்பு
புறநகர் ஏசி ரயிலில் டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை குறைக்க வாய்ப்பில்லை. இந்த டிக்கெட் நிர்ணயம் தெற்கு ரயில்வே வழங்கவில்லை. எவ்வளவு தூரத்திற்கு, எவ்வளவு டிக்கெட் என ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதனடிப்படையில் தான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே டிக்கெட் கட்டணத்தை தெற்கு ரயில்வேயால் குறைக்க முடியாது, என தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
அடுத்த ரயில் தயார்
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் முதல் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு ஏசி ரயில் இயக்கப்படுமா, என பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை ஐசிஎப் அதிகாரி தெரிவிக்கையில், ‘‘ரயில்வே நிர்வாகம் சார்பில் தெற்கு ரயில்வேக்கென 2 ஏசி ரயில்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டது. அதில் ஒன்று தான் தற்போது சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வருகிறது. மற்றொரு ரயில் தயாராகி வருகிறது. அடுத்த 5 மாதங்களுக்குள் இந்த ரயில் தயாரிக்கும் பணி முடிவடையும்,’’ என்றார். மேலும், இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்தான் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரியவரும்.
The post புறநகர் ஏசி ரயில்களை எந்த நேரத்தில் இயக்கலாம் என பயணிகளிடம் கருத்து கேட்பு: வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.