பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் 1000 கி.மீ நீள வடிகால்களை தூர்வாரி சீரமைக்க திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை, ஏப்.29: பருவமழைக்கு முன்னரே, 1000 கி.மீ நீள வடிகால்களை தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி 3,040 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, வடிகால் பணிகள் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, கடந்த ஆண்டு பருவமழையின் போது, சென்னையில் ஒரு சில மணி நேரங்களில் மழை நீர் வெளியேறியது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில், சாலையின் அகலம் எவ்வாறு இருந்தாலும், தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது.

அதன்படி, சென்னை மாநகர எல்லையில் 1,000 கி.மீ. நீள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை மாநகராட்சி தொடங்க உள்ளது. இதன் மூலம் நீரோட்டம் சீராகவும், வெள்ள நீர் தேங்குவது குறையவும் வழிவகை செய்யப்படும். இந்தத் திட்டத்தில், தூர்வாரும் பணிக்கு முன்னும் பின்னும் வடிகால்களின் நிலையை புகைப்பட ஆவணமாக்க, சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள புயல் நீர் வடிகால் வலையமைப்பு மொத்தம் 3,040 கி.மீ. நீளம் கொண்டது. இதில் 1,084 கி.மீ. இந்த ஆண்டு தூர்வாரப்பட உள்ளது. மழை தொடங்குவதற்கு முன், உயர் திறன் கொண்ட உறிஞ்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சும் இயந்திரங்களை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை பயன்படுத்தப்படவுள்ளது.இந்த திட்டத்தில் வெற்றிட தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

உயர் திறன் கொண்ட உறிஞ்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சும் கருவிகளை வாடகைக்கு எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4,000 கன மீட்டர் அளவு சேறு, கழிவு மற்றும் நீரை உறிஞ்சும் திறன் கொண்டவை. இந்த தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் 1000 கி.மீ நீள வடிகால்களை தூர்வாரி சீரமைக்க திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: