சென்னை விமான நிலையத்தில் ஜெர்மன் பெண்ணிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

மீனம்பாக்கம், ஏப்.22: சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற ஜெர்மன் நாட்டு பெண் பயணியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. அவரிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் இலங்கையின் தலைநகர் கொழும்பு செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் செல்ல வேண்டிய பயணிகள், அவர்களின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, விமானத்தில் ஏறுவதற்கு பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த விமானத்தில் இலங்கை வழியாக, ஜெர்மன் நாட்டின் தலைநகர் பிராங்க்பர்ட் செல்வதற்காக, அந்நாட்டை சேர்ந்த களோடியா டோரா (57) என்ற பெண் பயணி வந்திருந்தார். அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவரது கைப்பையில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை கண்டறிந்தனர். இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, எந்தவொரு விமானத்திலும் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்லக்கூடாது. அது, விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி குற்றம் ஆகும் என்பதால், அந்த ஜெர்மன் நாட்டு பெண் பயணி களோடியா டோரா வைத்திருந்த ஜிபிஎஸ் கருவியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு, அவரது இலங்கை பயணத்தையும் ரத்து செய்தனர்.

அப்பெண்ணிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஜெர்மன் நாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக சென்னை வந்திருந்ததும், தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு சென்று, தற்போது இலங்கை வழியாக ஜெர்மன் நாட்டுக்கு செல்ல இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தபோது, இந்த ஜிபிஎஸ் கருவியையும் எடுத்து வந்திருந்தேன். சென்னையில் நான் விமானத்தை விட்டு இறங்கி வெளியில் வரும்போது நடந்த சுங்கம், குடியுரிமை சோதனை உள்பட எந்தவொரு இடத்திலும் விமானத்தில் ஜிபிஎஸ் கருவி எடுத்து வருவது குற்றம் என்று கூறவில்லை என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். எனினும், அவரது விளக்கத்தை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் இருந்து பறிமுதல் செய்த ஜிபிஎஸ் கருவியை சென்னை விமான நிலைய போலீசாரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் ஜெர்மன் பெண்ணிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: