போலி தங்கம் விற்று ரூ.10 லட்சம் மோசடி: அக்கா, தம்பி சுற்றிவளைப்பு

சென்னை, ஏப். 29: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது இர்பான் (35). இவர் திருவள்ளூர் பெருமாள் செட்டி தெருவில் சாய்பாபா கோயில் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்காவான சரண்யா என்பவர் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி பைக்கில் வந்த லட்சுமி மற்றும் ரவிக்குமார் ஆகிய 2 பேர், தாங்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று கூறி நட்பாக பழகியுள்ளனர். அப்போது, தங்களிடம் தங்கப் புதையல் உள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்தால் அரை கிலோ தங்கத்தை கொடுப்பதாக கூறி ஆசையை தூண்டியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கொண்டு வந்த தங்கக் கட்டியை சரண்யா அருகில் உள்ள நகைக் கடையில் சோதனை செய்தபோது அது ஒரிஜினல் தங்கம் என தெரிவித்தனர்.

இது குறித்து சரண்யா தனது அண்ணன் முகமது இர்பானிடம் சொன்னதற்கு, அவர் என்னிடம் பேசச் சொல், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் காலை 11.30 மணி அளவில் கடைக்கு வந்து தங்க கட்டியை முகமது இர்பானிடம் கொடுத்து பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும் கடையில் சிறிது நேரம் உட்கார வைத்துவிட்டு அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்று சோதனை செய்தபோது, அது ஒரிஜினல் தங்கம் இல்லை என தெரிய வந்தது. இந்த நூதன மோசடி குறித்து திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசிக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து திருவள்ளூர் போலீசார் திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூரில் உள்ள கேட்டர்பில்லர் தனியார் தொழிற்சாலை அருகே உள்ள சிவன் கோயிலுக்கு இருவரையும் வரவழைத்தனர்.

இதையடுத்து சிவன் கோயில் அருகே பைக்கில் வந்த பெண் உட்பட இருவரையும், மறைந்திருந்த திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், கோபிகிருஷ்ணன், கோவிந்தசாமி மற்றும் தலைமை காவலர் உள்ளிட்ட காவலர்கள் கொண்ட குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இருவரையும் டிஎஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அவர்களிடமிருந்து 1/2 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட பித்தளையை கைப்பற்றினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் அவரது தம்பி ரவி என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்களுக்கு மூளையாக மதுரை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் செயல்பட்டு வருவதாகவும், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இதுபோன்ற நூதன மோசடியில் இவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். இதில் பெரும் மோசடியை தடுத்து நிறுத்தி மோசடி கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

The post போலி தங்கம் விற்று ரூ.10 லட்சம் மோசடி: அக்கா, தம்பி சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Related Stories: