இதற்கு தமிழக பாஜவில் தலைவர் உள்ளிட்ட மாற்றங்களையும் கொண்டுவர அக்கட்சி முடிவுசெய்து அதற்கான வேலையை தொடங்கியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையில் போட்டியிட்ட பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் பல இடங்களில் டெபாசிட்டையும் பறிகொடுத்தன. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணிக்கு முழுக்குபோட மாநில கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், பாஜவோ கூட்டணிக்கு வராதபட்சத்தில் கட்சிகளை பலதுண்டுகளாக்கி தன்வசப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் நகர்வு சென்று கொண்டிருந்த நிலையில் பாமகவில் அன்புமணியிடமிருந்து தலைவர் பதவியை பறிப்பதாகவும், அந்த பதவியை நானே வகிப்பேன் என்றும் ராமதாஸ் நேற்று முன்தினம் திடீரென அறிக்கை வெளியிட்டார். இந்த திடீர் அறிவிப்புக்கு பின்னால் பாஜவின் நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாமக வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த மக்களவை தேர்தலின்போது பாஜ கூட்டணியில் சேர வேண்டாமென்று தொண்டர்கள், நிர்வாகிகள் எவ்வளவோ கெஞ்சியும் அன்புமணி கூட்டணி வைத்தார். பாமக போட்டியிட்ட 10 இடங்களில் தர்மபுரி தவிர்த்து மற்ற இடங்களில் டெபாசிட் இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜ கூட்டணி ஒப்பந்தத்தின்படி அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை.
அதற்கு பதிலாக சாதாரண ரயில்வே வாரியத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராக பதவி அளிக்கப்பட்டது. இதனால் பாமக கடும் அதிருப்திக்குள்ளானது. அப்போது நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ்தள பதிவில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ வழுவலை கால வகையினானே… என்று பாஜ கூட்டணியில் இருந்து விலகுவது போல பதிவை சூசகமாக பதிவிட்டிருந்தார். மேலும் அன்புமணியை பாஜ வழக்கு ஒன்றை காட்டி கூட்டணிக்கு அடிபணிய வைத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து கட்சி தலைவர் பதவியிலும் அன்புமணி சிறப்பாக செயல்படவில்லை. கூட்டணி முடிவையும் சரியாக எடுக்கவில்லை என்றும் அவர் மீதும் ராமதாசுக்கு மனவருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு இசிஆரில் நடந்த புத்தாண்டு கூட்டத்தில் இளைஞர் சங்க தலைவர் பதவியில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனை, ராமதாஸ் நியமித்தபோது தந்தை, மகனிடையே மேடையிலே பேச்சு மோதல் ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தில் அன்புமணி கலந்து கொண்டு தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவிக்காததால், இதுகுறித்து தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்கள் கேட்டபோதும் ராமதாசால் பதில்கூற முடியாமல் தலைகுனிவு ஏற்பட்டது.
இது அன்புமணி மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வரும் சட்டமன்ற தேர்தலுக்கு, தமிழகத்திற்கு அமித்ஷா வருகையின்போது பாஜவுடனான கூட்டணி முடிவை அன்புமணி எடுத்து விடுவாரோ என்றுதான் முழு அதிகாரத்தையும் கையில் எடுக்க ராமதாஸ் தலைவர் பதவியை அவசரம் அவசரமாக அமித்ஷாவின் வருகைக்கு முன்னதாக பறித்து தன்வசப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக பாமக நிறுவனர் ராமதாசும், ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு, வக்பு சட்டத்திற்கு எதிராக தீர்மானம் உள்ளிட்டவைகளை பாராட்டியும், ஆளுநர் குறித்து விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.
இதனால் பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜவுடன் கூட்டணி சேருவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அன்புமணி இந்த அவசர முடிவை எடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில்தான் அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை எதிர்பாராத பாஜ தலைமை தற்போது அதிமுகவைபோல் பாமகவையும் பிளவுபடுத்த மும்முரமாக களமிறங்கலாம் என்பதால் கட்சியினருக்கு ரகசிய உத்தரவுகளை ராமதாஸ் பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
* விரைவில் நல்ல செய்தி: ஜி.கே.மணி தகவல்
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று மதியம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்த 45 வருடங்களாக ராமதாசுடன் இருக்கிறேன். என்னுடைய ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் ராமதாசும், அன்புமணியும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான். தேர்தல் நெருங்கி வரும் காலத்தில், ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது சம்பந்தமாக தான் பேசுவதற்காக வந்திருக்கிறேன். மீதி கேள்விகளுக்கு பேசிவிட்டு பதில் சொல்கிறேன் என்றார்.
பின்னர் ராமதாசுடன் 2 மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பை தொடர்ந்து வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமதாசை சந்தித்து அவரது அறிவிப்பு குறித்து பேசினேன். நான் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டார். உள்ளே பேசியதை கூற முடியாது இது உட்கட்சி பிரச்னை. ஒரு நம்பிக்கை உள்ளது, ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். பாமகவுக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. அது நடக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. மீண்டும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம், தேர்தலில் வெற்றி பெறுவோம். மிக நல்ல செய்தி விரைவில் வெளிவரும். இந்த சலசலப்பு விரைவில் சரியாகும். ஒற்றுமையாக செயல்படும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.
The post அன்புமணி பதவி நீக்கத்தில் பரபரப்பு பின்னணி பாமகவை பிளவுபடுத்தும் பாஜ திட்டத்தால் அதிகாரத்தை கையில் எடுத்த ராமதாஸ்: அமித்ஷாவின் கூட்டணி மிரட்டலுக்கு செக் appeared first on Dinakaran.