பழநி: பழநி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மே 8ம் தேதி மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மேற்குரத வீதியில் லட்சுமிநாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சாமி கோயில் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ெவகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக, காலை 8.30 மணியளவில் லட்சுமி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, சங்கு, நாமம், கருடாழ்வார் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடியானது பக்தர்களின் `கோவிந்தா’ கோஷம் முழங்க கொடிமரத்தில் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழநி கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், உபயதாரர் கார்த்திகேயன், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது. 10ம் தேதி காலை 7.31 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் சப்பரம், சிம்மம், சேஷ, அனுமார், தங்கக்குதிரை, தோள் கன்னி உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதேபோல, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வரும் 12ம் தேதி 108 பால்குட ஊர்வலம் நடைபெறும். இதையொட்டி வெள்ளி ரதத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
The post பழநி லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 8ல் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.