முதலீட்டாளர்களிடம் ரூ.5 கோடி ஏமாற்றிய தம்பதி தலைமறைவு: போலீசார் வழக்குபதிந்து விசாரணை

சென்னை: வணிக முதலீட்டாளர்களிடம் ரூ.5 கோடி ஏமாற்றி தலைமறைவான கணவன், மனைவி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவர், தாம்பரம் காவல் ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், சேத்துபட்டு பகுதியை சேர்ந்த வாசுதேவன் வீட்டு அலங்காரத் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த நிபுணராக எங்களிடம் அறிமுகமானார். அவர் மீதான நம்பிக்கையில் எனது வாடிக்கையாளர்களுக்கு வாசுதேவனை அறிமுகப்படுத்தினேன். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிரேப்ஸ் அண்ட் ட்ரீம்ஸ் என்ற பெயரிலான நிறுவனத்திற்கு வாசுதேவனும், அவரது மனைவி வாசுதேவனும், அவரது மனைவி ரோகிணியும் உரிமையாளர்களாக இருந்ததாக தெரிவித்தனர்.

இதனால், நானும் எனது வாடிக்கையாளர்களும் வாசுதேவனும் சேர்ந்து ரூ.25 லட்சம் முதலீட்டில் ஒரு ஷோரூம் அமைத்து ஏசியன் பெயிண்ட்ஸின் ஏஜென்சியாக செயல்பட்டோம். நானும், எனது கூட்டாளிகளும் சொந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் அவர் கூறியதை உண்மையென நம்பினோம். பின்னர் ஷோரூம் சேதமடைந்து இருப்பதை பார்த்து அவரிடம் கேட்டபோது, மழையின் காரணமாக பழுது ஏற்பட்டதாக கூறினார்.

இந்நிலையில், கடந்த 2023 அக்டோபர் மாதம் வாசுதேவன் திடீரென மாயமானார். பிறகு அவர் குறித்து விசாரித்த போது அவரும் அவரது மனைவி ரோகினியும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 2024ம் ஆண்டு அண்ணா நகரில் வாசுதேவன் வார்ம் அண்ட் கூல் என்ற பெயரில் வேறு நிறுவனத்தை நடத்தி வந்ததும், எங்கள் பங்குகளை விற்று கணக்கில் வரவு வைக்காமல், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.

மேலும் ஸ்டைலெக்ஸ்ட்ரா என்ற வர்த்தக முத்திரையை சட்டவிரோதமாக தனி உரிமையாளராக பதிவு செய்தும், தனது குடியிருப்பு முகவரியில் நிறுவனத்தையும் பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டால், அவர் அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார். அதன்பிறகு ரூ.7,50,00,000 தொகையை 4 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் ஷோரூமையும் நடத்தாமல் மூடிவிட்டார். எனது கூட்டாளிகளான மாயா சிதம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி இந்த புகாரை பதிவு செய்கிறேன். வாசுதேவன் ஸ்டைல்க்ஸ்ட்ரா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸிலிருந்து பொருட்களை வாங்கும் விவகாரங்களை கவனித்து வந்தார் என்பதை மறுக்க முடியாது. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பொருட்களில், சுமார் ரூ.5,15,04,402 மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, ரூ.4,24,01,326 மட்டுமே ஸ்டைல்க்ஸ்ட்ராவின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ.7,21,00,000 வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், ஏசியன் பெயிண்ட்ஸில் வாங்கப்பட்ட பங்குகள் வாடிக்கையாளர் செலுத்திய தொகையுடன் செலுத்தப்படவில்லை. ஆனால் மற்ற அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களுக்கு அவரது செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது, இது தோராயமாக ரூ.2,00,00,000 ஆகும். எனவே வாசுதேவன் ரூ.5 கோடி வரை ஏமாற்றியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் மீது வழக்குபதிந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் வாசுதேவன் -ரோகிணி தம்பதி தலைமறைவாகிவிட்டனர். இதனால், குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post முதலீட்டாளர்களிடம் ரூ.5 கோடி ஏமாற்றிய தம்பதி தலைமறைவு: போலீசார் வழக்குபதிந்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: