கிருஷ்ணகிரி, ஏப்.3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விலையை நிர்ணயம் செய்ய, உடனடியாக முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதற்கு உரிய சீதோஷ்ண நிலை உள்ள மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 2,24,767 ஹெக்டேர் ஆகும்.
மாவட்டத்தில் பிரதான பயிர்களான நெல், ராகி, துவரம் பருப்பு, சோளம், கம்பு, நிலக்கடலை, குதிரைவாலி மற்றும் சிறு தானியங்கள் உள்ளன. விவசாயத்தில் 76 சதவீதம் பேர் குறுவிவசாயிகள், 16 சதவீதம் பேர் சிறு விவசாயிகள், 8 சதவீதம் பேர் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக கே.ஆர்.பி.அணை, கெலவரப்பள்ளி அணை மற்றும் பாரூர் ஏரி ஆகியவை உள்ளன.
மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், 30க்கும் மேற்பட்ட மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தென்னையும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு போதிய மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மா மரங்களில் பூத்த பூக்கள் அனைத்தும், கருகி உதிர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மா விளைச்சல் மிகவும் குறைந்ததால், விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
இதனால் விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மா சீசன் துவங்கி உள்ளது. இங்கு விளையும் மாங்காய்கள், பெரும்பாலும் இம்மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கே அனுப்பப்படுகிறது. இதன் மூலம் தான், மா விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், விளைச்சல் இல்லாததாலும், மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது, உடனடியாக முத்தரப்பு கூட்டம் நடத்தி, மாம்பழத்திற்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மா விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு கடும் வறட்சியால் மா, தென்னை மரங்கள் அதிகளவில் காய்ந்து, மகசூல் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டு போதிய மழை இல்லாததால், மா மரத்தில் பூத்த பூக்கள், பெரும்பாலும் கடும் வெயிலால் உதிர்ந்து போனது. எனவே, நடப்பாண்டு மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள், வெளிமாநிலங்களில் இருந்து கூடுதல் விலைக்கு மாங்காய்களை வாங்கி வந்து, மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். ஆனால், இம்மாவட்டத்தில் விளையும் மாங்காய்க்கு, உரிய விலை கொடுக்க தயங்குகின்றனர்.
எனவே, நடப்பாண்டு மா விவசாயிகளை காப்பாற்றும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள், அதிகாரிகள், விவசாயிகளை கொண்டு முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்தி, மாங்காய்க்கு உரிய விலையை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், மாந்தோட்டங்களுக்கு முழு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து தரவும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை மூலம் உரிய ஆலோசனைகள் மற்றும் மானியத்தில் மருந்துகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மா விலையை நிர்ணயம் செய்ய உடனடியாக முத்தரப்பு கூட்டம் appeared first on Dinakaran.