கே.ஆர்.பி., அணையிலிருந்து ஏப்ரல் முழுவதும் தண்ணீர் திறக்க வேண்டும்

கிருஷ்ணகிரி, ஏப்.2: நெற்பயிர்களில் கதிர் வர காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், கேஆர்பி அணையிலிருந்து ஏப்ரல் மாதம் முழுவதும் தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து இரண்டு போக நெற்பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிருஷ்ணகிரி தாலுகா பெரியமுத்தூர், திம்மாபுரம், பையூர், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட 9012 எக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், 2ம் போக சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரை கொண்டு, விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.

ஆனால், கதிர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெற்பயிரை பாதுகாக்க அணையிலிருந்து ஏப்ரல் மாதம் முழுவதும் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் பாசன விவசாயிகள், கிருஷ்ணகிரி அணையின் உதவி செயற்பொறியாளர் அறிவொளியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து ராமகவுண்டர் கூறுகையில், 2ம் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், வரும் 16ம் தேதி நிறுத்தப்பட உள்ளது. அதேவேளையில், நெற்பயிர்களில் கதிர் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடைமடை பகுதியான பையூரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமமென கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
அப்போது, பாசன விவசாய சங்கத்தைச் சேர்ந்த ராஜா, கணேசன், தேவன், கார்த்திக், கோவிந்தராஜ், முருகன், மாரியப்பன், சக்திவேல், ரகு, செந்தாமரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கே.ஆர்.பி., அணையிலிருந்து ஏப்ரல் முழுவதும் தண்ணீர் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: