கிருஷ்ணகிரி, ஏப்.4: கோடை வெயிலின் தாக்கத்தால், கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொள்புதூரில் இருந்து கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை மற்றும் பாரூர் பெரிய ஏரி ஆகியவை உள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில், ஒரு பகுதியில் மட்டும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், வேப்பனஹள்ளி, பர்கூர், மத்தூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள விவசாய நிலங்கள், எவ்விதத்திலும் பயன் பெறுவதில்லை. குறிப்பாக பர்கூர், மத்தூர் ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், கிருஷ்ணகிரி அருகேயுள்ள படேதலாவ் ஏரி தண்ணீரையே பாசனத்திற்கு நம்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில், சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் படேதலாவ் ஏரி(பெரிய ஏரி) அமைந்துள்ளது. மார்க்கண்டேய நதியில் இருந்து கால்வாய் மூலம், இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளில் உள்ள 50ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால் மார்க்கண்டேய நதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டதால், படேதலாவ் ஏரியும் வறண்டு விட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் பெய்யும் மழையால், மார்க்கண்டேய நதியின் மூலம், மாரச்சந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வந்தது.
இதனிடையே, படேதலாவ் ஏரியில் இருந்து, பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு ₹7கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த கால்வாயில், ஓரிரு முறை மட்டுமே தண்ணீர் சென்றது. இதனால், கிருஷ்ணகிரி, பர்கூர் ஒன்றிய விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடைமடை ஏரி வரை, இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. தற்போது மழை பொழிவு இல்லாததாலும், கடும் வெயிலின் தாக்கம் காரணமாகவும், படேதலாவ் ஏரியில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்று உபரிநீரை படேதலாவ் ஏரிக்கு கொண்டு வரும் வகையில், எண்ணேகொள் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், படேதலாவ் ஏரிக்கு அமைக்கப்படும் புதிய இடதுபுற பிரதான கால்வாயின் நீளம் 23 கி.மீ.ஆகும். இதற்காக 155.81 ஏக்கர் பட்டா நிலம், 18.57 ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இருப்பினும் கால்வாய் அமைக்கும் பணிகள், இதுவரை 25 சதவீதம் கூட முடியவில்லை. இந்த பணிகள் மிகவும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளக்காலங்களில் உபரிநீர் ஆற்றில் வீணாகும் நிலை தொடர்கிறது. எனவே, எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதே போல், மாரச்சந்திரம் தடுப்பணை முதல் படேதலாவ் ஏரி வரை அமைக்கப்பட்டுள்ள கால்வாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.