தேன்கனிக்கோட்டை, ஏப்.3: தேன்கனிக்கோட்டை அருகே ஆழ்துளை கிணறு, சொட்டு நீர்ப்பாசன கருவிகளை யானைகள் நாசம் செய்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 5 மாதங்களாக ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், சானமாவு வனப்பகுதி என நான்கு பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், அருகில் உள்ள நொகனூர், தாவரகரை, கண்டகானப்பள்ளி, மலசோனை, ஒசட்டி, கேரட்டி ஆகிய கிராம பகுதிகளில், இரவு நேரங்களில் வாழை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், சாமந்தி தோட்டங்களை நாசம் செய்து வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால், யானைகள் தண்ணீர், உணவு தேடி கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன.
நேற்று முன்தினம் இரவு, 20 யானைகள் மலசோனை கிராமம் பசுவராஜன் என்பவரது தோட்டத்தில் புகுந்து, வாழை, தென்னை, பப்பாளி, பலா மரங்களில் காய்களை தின்று நாசம் செய்துள்ளன. மேலும், தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்தியதால், மின் மோட்டார் உடைந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. மேலும் சொட்டு நீர்ப்பாசன கருவிகள், பைப்லைன்களை உடைத்து சேதம் செய்துள்ளன.
நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த பசுவராஜன் அதிர்ச்சி அடைந்தார். யானைகளால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய நிவாரனம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளனர். அட்டகாசம் செய்யும் யானைகளை, ஜவளகிரி வனப்பகுதி வழியாக, கர்நாடக வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆழ்துளை கிணறு, சொட்டு நீர்ப்பாசன கருவிகளை நாசம் செய்த யானைகள் appeared first on Dinakaran.