திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்னும் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். சிறப்பு மிக்க இக்கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 16ம் தேதி முதல் பங்குனி பிரமோற்சவம் விழா நீர் வண்ணப் பெருமாளுக்கு நடைபெற்று வருகிறது.

வரும் 26ம் தேதி வரை இந்த பிரமோற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள், தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா…’ கோஷம் விண்ணை முட்ட தேரை பிடித்து இழுத்தனர். நான்கு மாடவீதிகளின் வழியாக உலா வந்த தேர் பின்னர் பிற்பகல் 12 மணி அளவில் புறப்பட்ட இடத்திற்கே சென்று நிலை நிறுத்தப்பட்டது.

பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடியும், மஞ்சள் நீர் தெளித்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற வேண்டி சாமி தரிசனம் செய்தனர். தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர், குளிர்பானங்கள் அப்பகுதி பொதுமக்களால் வழங்கப்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் சங்கர் நகர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

The post திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: