அமெரிக்காவில் கல்வித் துறை கலைப்பு.. மாகாணங்கள் வசமாகிறது கல்வி: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் கல்வித் தரம் மேம்படாததால் அமெரிக்க கல்வித்துறை கலைக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாட்டின் கல்வித் துறைக்கு கடந்த 40 ஆண்டுகளாக அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் கல்வித் தரம் மேம்படவில்லை. ஐரோப்பிய நாடுகள் இன்னும் சீனாவை விட பின்தங்கி உள்ளன. இருப்பினும், மாணவர்களுக்கான கட்டணச் சலுகைகள் மற்றும் சில முக்கியமான திட்டங்கள் தொடரும்.

அமெரிக்க அரசின் கல்வித் துறை கலைக்கப்படுகிறது. கல்வித்துறையின் அதிகாரங்கள் மாநிலங்களுக்கு ஒப்படைக்குமாறு, கல்விச் செயலாளர் லிண்டா மெக்மஹோனுக்கு உத்தரவிடப்படுகிறது’ என்றார். மேற்கண்ட நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திடும் போது, வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் அவருடன் பள்ளிக் குழந்தைகளும் உடனிருந்தனர். மேலும் பல மாநிலங்களின் தலைவர்களும் ஆளுநர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த 1979ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் கல்வித் துறையை ஒன்றிய அமெரிக்க அரசு மேற்பார்வையிட்டு வருகிறது.

ஒட்டுமொத்த நிர்வாகத்தில் கல்வித் துறையில் மாநிலங்களின் பங்கு குறைவாக இருந்தாலும், நிதியை பொருத்தமட்டில் ஒன்றிய அமெரிக்க அரசின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. டிரம்பின் தற்போதைய உத்தரவால், மாநிலங்களே இனிமேல் கல்வித்துறை தொடர்பான முடிவுகளை எடுக்கும். இருப்பினும், டிரம்பின் இந்த முடிவுக்கு ஜனநாயகக் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டிரம்பின் சமீபத்திய முடிவு நடைமுறைக்கு வருவது எளிதானதாக இருக்காது என்றும், இந்த முடிவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டியது கட்டாயம் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, தேவையற்ற செலவினங்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவில் கல்வித் துறை கலைப்பு.. மாகாணங்கள் வசமாகிறது கல்வி: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: