ஜெருசலேம்: காசாவைத் தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே காசாவில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர், அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் ஓரளவு முடிவுக்கு வந்தது. இதற்காக ஏற்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ம் தேதி முடிவுற்ற நிலையில் இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால், காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (18ம் தேதி) காசாவின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 634 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 48 மணி நேரத்தில் 130 அப்பாவி மக்கள் பலியாகினர் . இந்நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், இஸ்ரேலின் மெடுலா நகரை குறி வைத்து ஹிஸ்புல்லா படையினர் 5 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. காசாவைத் தொடர்ந்து லெபனானிலும் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post காசாவைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் appeared first on Dinakaran.