விண்வெளியில் 9 மாதம் தங்கிய சுனிதா வில்லியம்சுக்கு தினசரி கூடுதல் சம்பளம் ரூ.435 தானா? ஆச்சரியமாக கேட்ட அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்: விண்வெளியில் கூடுதலாக 9 மாதம் தங்கி ஆய்வுப் பணி செய்ததற்காக சுனிதா வில்லியம்சுக்கு கூடுதல் சம்பளமாக தினசரி ரூ.435 கொடுப்படுவது குறித்து கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆச்சரியப்பட்டார்.  அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 8 நாள் பயணத்திட்டமாக கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். ஆனால் அவர்களது விண்கலம் செயலிழந்ததால் கூடுதலாக 278 நாட்கள் உட்பட மொத்தம் 286 நாட்களை விண்வெளியில் செலவிட்டனர்.

கூடுதலாக 9 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்கு ஒவ்வொரு நாளும் தலா 5 அமெரிக்க டாலர் என 286 நாட்களுக்கு 1430 டாலர்கள் (ரூ.1,22,000) கூடுதல் ஊதியமாக நாசா வழங்கும். அமெரிக்காவில் அரசு ஊழியர்களுக்கு எந்த ஓவர் டைம் சம்பளமும் கிடையாது. வேலை நேரத்தை தாண்டியோ, விடுமுறை நாட்களிலோ அவர்கள் வேலை பார்த்தால் கூடுதல் சம்பளம் தரப்படாது. ஆனால், நாசா விஞ்ஞானிகளுக்கு மட்டும் அத்தியாவசிய தேவைக்காக கூடுதல் சம்பளம் தரப்படும். இது விண்வெளியில் இருந்தாலும் பொருந்தும்.

அந்த வகையில், சுனிதா மற்றும் வில்மோருக்கு ஓவர் டைம் சம்பளம் ஒருநாளுக்கு 435 தரப்படுவது தொடர்பாக அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் ஆச்சரியத்துடன், ‘‘அவ்வளவுதானா? இதை யாருமே என்னிடம் சொல்லவில்லையே. சுனிதாவும், வில்மோரும் செய்த பணிக்கு இந்த சம்பளம் மிக குறைவு. என்னிடம் சொல்லியிருந்தால், நானே எனது சொந்த பணத்தில் இருந்து வழங்கியிருப்பேன். சுனிதாவையும், வில்மோரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்கு எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் நம்மோடு இல்லையென்றால் சுனிதாவும், வில்மோரும் இன்னும் நீண்ட காலம் விண்வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்’’ என்றார்.

The post விண்வெளியில் 9 மாதம் தங்கிய சுனிதா வில்லியம்சுக்கு தினசரி கூடுதல் சம்பளம் ரூ.435 தானா? ஆச்சரியமாக கேட்ட அமெரிக்க அதிபர் appeared first on Dinakaran.

Related Stories: