இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சார்பில் எடப்பாடிக்கு ஈரோட்டில் நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் மீண்டும் உருவானது. அப்போது முதல் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே செங்கோட்டையன் கூறுவதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில் சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இந்த பரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. அப்போது எடப்பாடியை நேரடியாக சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்தார். அதே சமயம் ஓபிஎஸ்சை பார்த்து புன்னகைத்தபடி சென்றார். கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அதிமுகவினர் எதிர்ப்பு குரல் எழுப்பியபோது செங்கோட்டையன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். பின்னர் வெளிநடப்பு செய்யும்போது, செங்கோட்டையன் மட்டும் வெளியில் செல்லாமல் இருந்தார். எம்எல்ஏக்கள் வற்புறுத்தி அவரை அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில், சபாநாயகர் அப்பாவுவை, செங்கோட்டையன் அவரது அறையில் திடீரென சந்தித்து பேசினார். தொடர்ந்து மறுநாளும் செங்கோட்டையன் சபாநாயகருடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தினார். சபாநாயகரை செங்கோட்டையன் சந்தித்து பேசியபோது, தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இருந்தனர். ஆனால் செங்கோட்டையன், எடப்பாடியை புறக்கணித்துவிட்டு நேரடியாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து எடப்பாடியிடம் நிருபர்கள் கேட்டதற்கு எதற்காக அப்படி நடந்து கொள்கிறார் என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று ஆவேசமாக பதில் அளித்தார். இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன் நான் நேர்வழியில் தான் செல்கிறேன், ‘எனது தொகுதி பற்றி கொடுத்த கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து சபாநாயகரிடம் பேசினேன்’ என்று பதில் அளித்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பேசுகையில், ‘ஒரு எம்.எல்.ஏ., சபாநாயகரை சந்திப்பது சகஜமான ஒன்றுதான்.
ஆனால், அதுவெல்லாம், தற்போது விமர்சனமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், இக்கட்டான சூழலில் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். 2026 நெருங்கும் நேரம். இந்த நேரத்தில் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதைத்தான், இங்கு வந்திருக்கும் நான் உங்களுக்கு கோடிட்டு காட்ட விரும்புகிறேன். எந்த பதிலை சொன்னாலும் எப்படி போகும் என்பது எல்லாம் உங்களுக்கு தெரியும். எனவே, நான் தடுமாறாமல், ஒவ்வொரு வார்த்தையும் அளந்து பேச வேண்டியிருக்கிறது. சீமானை போல அள்ளி பேசிவிட முடியாது.
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும்செய்யப் போவதில்லை. எந்தப் பாதை சரியாக இருக்கிறதோ, அதில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது, என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது. பாரதியார் சொன்னதைப் போல, சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்’ என்று பேசினார். இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அளித்த பேட்டியில், ‘செங்கோட்டையனின் செயல்பாடுகள் பற்றி அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்று பொதுச் செயலாளர் கூறிவிட்டார்.
எடப்பாடி 4 ஆண்டுகள், 3 மாதம் ஆட்சியில் இருந்தார். கடந்த 4 ஆண்டாக எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும். கசப்புகள் இருக்கும். இந்த வேறுபாடுகள், மன வருத்தத்தால் கட்சியில் இருந்து போனவர்கள் காணாமலே போய்விட்டார்கள். சொந்த அண்ணன்-தம்பிக்குள் பிரச்னை என்றால் பேசி தீர்க்க வேண்டும். செங்கோட்டையனுக்கு ஏதாவது பிரச்னை என்றால் எடப்பாடியை சந்தித்து பேசி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொதுவெளியில் அவர் இப்படி நடந்து கொள்வது அநாகரிகமான செயலாகும்’ என்று கூறினார்.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் நேற்று பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், ‘அதிமுக பலவீனமாகி வருகிறது, 90 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுக பலம் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் குரலாகத்தான் செங்கோட்டையன் இருப்பதாக பார்க்கிறேன். செங்கோட்டையனுக்கு நாகரிகம், அநாகரிகம் என்று சொல்லி கொடுக்க வேண்டியதில்லை, அவர் எந்தவித சர்சையிலும் சிக்காதவர். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து அதிமுகவில் உள்ளார், 89ல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 எம்எல்ஏக்களில் 7 பேருடன் ஜெயலலிதாவிடம் வந்தவர்.
நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை காப்பாற்றி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ். செங்கோட்டையன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயம் சந்தித்து பேசி இருக்கலாம். அவர்கள் சந்திப்பு நடக்கவே இல்லை என்று எப்படி சொல்ல முடியும். பழனிசாமி பேசுவதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்றார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ‘அதிமுக, இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக உள்ளது. தொண்டர்களின் சக்தி இன்றைக்கு பிரிந்து கிடக்கின்றது. பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதுதான் அதிமுக தொண்டர்களின் கருத்து.
அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறி தள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கும் உள்ள மோதல் குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்க வேண்டும். செங்கோட்டையன் மூத்த தலைமை நிர்வாகியாக செயல்பட்டு இருக்கிறார். எம்ஜிஆர் காலத்திலிருந்து பணியாற்றி இருக்கிறார்’ என்றார். இந்நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘கொங்கு நாட்டு தங்கம், எனது அரசியல் குருமார்களின் ஒருவர். கழகத்தின் உண்மை தொண்டன். அண்ணன் செங்கோட்டையன் மனசாட்சி உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.
* நான் தடுமாறாமல், ஒவ்வொரு வார்த்தையும் அளந்து பேச வேண்டியிருக்கிறது. சீமானை போல அள்ளி பேசிவிட முடியாது. சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்.
* செங்கோட்டையனுக்கு ஏதாவது பிரச்னை என்றால் எடப்பாடியை சந்தித்து பேசி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொதுவெளியில் அவர் இப்படி நடந்து கொள்வது அநாகரிகமான செயலாகும்.
* பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதுதான் அதிமுக தொண்டர்களின் கருத்து. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறி தள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும்.
* 90 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுக பலம் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். செங்கோட்டையனுக்கு நாகரிகம், அநாகரிகம் என்று சொல்லி கொடுக்க வேண்டியதில்லை, அவர் எந்தவித சர்சையிலும் சிக்காதவர்.
* கொங்கு மண்டலத்தின் டிரம்ப் கார்டு
எடப்பாடி- செங்கோட்டையன் இடையே மோதல் பூதாகரமாகி வரும் நிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஓபிஎஸ், டிடிவி களமிறங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சசிகலா, ஓபிஎஸ், டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் அதிமுக விரைவில் ஒன்றிணையும் என கூறி வருகின்றனர். சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா சந்தித்து பேசினார். இது, அதிமுக இணைப்புக்கான சந்திப்பு என்றே கூறப்படுகிறது. இணைப்புக்கு எதிராக உள்ள எடப்பாடிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் எடப்பாடிக்கு எதிராக கொங்கு மண்டலத்தில் ஒரு மூத்த தலைவரை உருவாக்க சசிகலா, ஓபிஎஸ், டிடிவி மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் பாஜ மேலிடம் முயற்சித்து வருகிறது. இதற்கான டிரம்ப் கார்டு தான் செங்கோட்டையன். இவருக்கு பின்னால் அணிவகுக்க கொங்கு மண்டலத்தில் பலர் முன்வந்து உள்ளனர். இதனால் கட்சி மீண்டும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
The post எடப்பாடி பழனிசாமியுடன் முற்றும் மோதல்: செங்கோட்டையனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ், டிடிவி; மூத்த தலைவர்கள் வார்த்தை போரால் அதிமுகவில் பரபரப்பு appeared first on Dinakaran.