சென்னை: தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பு போராட்டங்களை பாஜவினர் நடத்துவார்களா என திருமாவளவன் கேள்வி எழுப்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை என்ற போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜ தலைவர்களை வீட்டு காவலில் வைத்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை காப்பாற்றுவதற்காக காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனாலும் பாஜவின் போராட்டத்தை வரவேற்கிறோம். மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதே நேரத்தில் பாஜவினர் அரசியல் காரணங்களுக்காக, அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கும் யுக்தியாக, இதை கையாளுவார்களேயானால் அவர்களால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. பாஜ ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார்களா என்ற கேள்வியும் ஒரு புறத்தில் எழும்புகிறது. பாஜ ஆளுகின்ற மாநிலங்களிலும், பாஜவினர் மது ஒழிப்பை முன்னிறுத்தினால் அதை நாம் முழுமனதோடு வரவேற்கலாம், பாராட்டலாம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
The post தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பு போராட்டம் பாஜவினர் நடத்துவார்களா? திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.