ஏப்ரல் முதல் வாரத்தில் டாஸ்மாக் கடைகளை பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம். அடுத்த 15 நாட்களுக்குள் இரண்டு தேதிகளில் நடைபெறும். வருகிற 22ம் தேதி ஒரு போராட்டம் சென்னையில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதையும் அறிவிக்க போவதில்லை. காவல்துறை பாஜவிற்கு மரியாதை அளிக்கவில்லை என்றால் பாஜவும் மரியாதை கொடுக்காது. பாஜ தொண்டர்களுக்கு சொல்கிறேன். பாஜவுக்கு மரியாதை கொடுக்காத யூனிபார்ம் போட்ட போலீஸ்காரன் அனைவரும் தமிழ்நாட்டில் இன்று முதல் தூங்க கூடாது. பாஜ விதவிதமான போராட்டங்களை மே 2026 வரை முன்னெடுக்கும். காவல்துறையினருக்கு ஆதரவாக பேசிய அரசியல்வாதியான நான், பாஜவினரை அவமானப்படுத்திய பின்னர் இன்று முதல் காவல்துறையினரை தூங்க விட மாட்டேன். இத்தனை காலமாக பொறுமையாக எப்போதும் காவல்துறைக்கு ஆதரவாக பேசிய ஆள் நான்.
ஆனால் என்னுடைய தொண்டர்கள், சகோதரிகளை இழிவுபடுத்திய பிறகு இன்று இரவு முதல் நான் காவல்துறையை தூங்க விடமாட்டேன். காவல்துறையினருடன் சண்டையிட்டுதான் வெளியே வந்துள்ளோம். இரவு 11 மணி வரை அமர வைக்க வேண்டும் என்றால் என்ன நியாயம். இது டெல்லி அரசியல் இல்லை. தமிழ்நாடு அரசியல், எடுபடுமா இல்லையா என்பதை பார்ப்போம். நிச்சயம் நாங்கள் செய்து காட்டுவோம். பாஜவின் போராட்டம் வீரியம் அதிகரிக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் பள்ளி மாணவர்கள் போல் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் முதலில் வரட்டும். சினிமா ஷூட்டிங்கில் இருந்து கொண்டு, நடிகைகளின் இடுப்பைக் கிள்ளிக் கொண்டு அரசியல் செய்பவர் தவெக தலைவர் விஜய். எனக்கும் பேசத் தெரியும். தவெக எல்லையை மீறக் கூடாது. சும்மா புஸ்ஸி குஸ்ஷி என வீட்டில் அமர்ந்துகொண்டு அறிக்கை விட கூடாது.
என்ன தெரியும் அவர்களுக்கு, மக்கள் கஷ்டம் பற்றி என்ன தெரியும். நான் என்ன விஜய் மாதிரி உட்கார்ந்து கொண்டு நடிகைகளின் இடுப்பைக் கிள்ளிக் கொண்டு அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறேனா. நான் களத்தில் இருக்கிறேன். விஜய் ஏன் 50 வயதில் அரசியலுக்கு வருகிறார், 30 வயதில் எங்கு சென்றார், நாடகம் செய்வது விஜய், களத்திற்கு வா உனக்கு என்ன தெரியும் மக்கள் கஷ்டத்தை பற்றி. திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான ரகசிய உடன்படிக்கைதான். விஜய் திரைப்படத்தில் புகைபிடித்துவிட்டு, குடித்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு என்ன உரிமை உள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன. ஒருநாள் குல்லா போட்டுவிட்டு சிறுபான்மையினர் அருகில் இருந்து ஒரு நாள் இப்தார் வைத்துவிட்டால் எல்லாம் வந்து விடுமா, சின்ன பசங்க மாதிரி பாஜவிடம் வந்து சண்டை போடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post ‘சின்ன பசங்க மாதிரி அரசியல் செய்யக்கூடாது’ நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்பவர் நடிகர் விஜய்: பாஜ தலைவர் அண்ணாமலை தாக்கு appeared first on Dinakaran.