மாநிலத்தை திவாலாக்கிய கே.சி.ஆரின் பாவப்பட்டியலை வெளியிடுவேன்: தெலங்கானா முதல்வர் ஆவேசம்

வாரங்கல்: தெலங்கானா மாநிலத்தை திவாலாக்கிய கே.சி.ஆரின் பாவப் பட்டியலை வெளியிடுவேன் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவேசமாக பேசினார். தெலங்கானா மாநிலம் ஜங்காவ்ன் மாவட்டம் ஸ்டேஷன் கான்பூரின் புறநகர்ப் பகுதியான சிவுனிபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், ‘கே.சி.ஆரின் (பிஆர்எஸ் கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்) பத்து ஆண்டுகால ஆட்சியில், தெலங்கானா மாநிலம் கடனில் மூழ்கியது.

திவாலான அரசாக மாறியது. கே.சி.ஆரின் ஆட்சிக் காலத்தில் ரூ.8.29 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆட்சி அதிகாரத்தை இழந்தால், அவர் (கே.சி.ஆர்) எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு பதிலாக தனது பண்ணை வீட்டில் படுத்துக் கொண்டு பிரச்னையை கிளப்பிவிடுவார். தெலங்கானா மாநிலத்தின் தந்தை என்று கே.சி.ஆரை சிலர் அழைக்கின்றனர். தேசப்பிதாவுக்கும், கே.சி.ஆருக்கும் இடையே ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? உண்மையான தேசப்பிதா ஏழை கிராமங்களில் தனது வாழ்க்கையை கழித்த நிலையில், தெலங்கானா மாநிலத்தின் தந்தை என்று கூறப்படுபவர் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறார். முந்தைய ஆட்சியாளர்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு எங்களது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள். கே.சி.ஆரும், அவரது ஆட்சியில் செய்த பாவங்களின் பட்டியலை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடுவேன். வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் அவற்றை சட்டசபையில் அம்பலப்படுத்துவேன். கடின உழைப்பால் கட்டமைக்கப்பட்ட தெலங்கானா மாநிலம், தற்போது பணக்கார மாநிலமாக மாறியுள்ளது. எங்களது அரசு, இந்த ஆண்டில் அசல் மற்றும் வட்டி உட்பட ரூ.1.53 லட்சம் கோடி கடனை செலுத்தியது. அந்தப் பணம் இருந்திருந்தால், மாநிலத்தில் 30 லட்சம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும்’ என்று ஆவேசமாக பேசினார்.

The post மாநிலத்தை திவாலாக்கிய கே.சி.ஆரின் பாவப்பட்டியலை வெளியிடுவேன்: தெலங்கானா முதல்வர் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: