உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாம்பதி கூட்ரோடில் நேற்று முன்தினம் மாசி மகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, மாசி மகத்தை முன்னிட்டு பெருநகர் பகுதி பிரம்மபுரீஸ்வரர், மானாம்பதி ஸ்ரீ வனசுந்தரேஸ்வரர் உள்பட 16 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, 16 கிராம சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அந்தந்த கிராமங்களில் திருவீதியுலா நடந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட 16 கிராம சுவாமிகளும் மானாம்பதி கூட்ரோட்டில் உள்ள திடலில் ஒன்றுகூடி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் மானாம்பதி, பெருநகர், விசூர், தேத்துறை, தண்டரை, இளநகர், சேப்பாக்கம், மேல்மா, குரும்பூர், நெடுங்கல், அத்தி, சேத்துப்பட்டு, இளநீர்குன்றம், கீழ்நீர்குன்றம், அகஸ்தியப்பா நகர், புதூர் உள்பட 16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் ஒன்று கூடியவுடன் மகா தீபாராதனை காண்பிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், அந்தந்த கிராமங்களுக்கு 16 சுவாமிகளும் மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் புறப்பட்டு சென்றன. மாசி மகத்தையொட்டி 16 கிராம சாமிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலமாக காணப்பட்டது.
The post மாசி மகத்தில் ஒன்றுகூடிய 16 கிராம சுவாமிகள்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.