செங்கல்பட்டு: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல், தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை போன்ற மாவட்டங்களிலும் 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று கனமழை பெய்தது. பரனூர், திம்மாவரம், ஆத்தூர், தேவனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், பொத்தேரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழைநீர் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், பருவமழைக் காலத்தில் பெய்வதுபோல கனமழையானது கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பகல் நேரத்தில் மழை பெய்ததால் குளிர் வானிலை நிலவியது. கருமேகம் சூழ்ந்து குளிர் வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை appeared first on Dinakaran.