மாமல்லபுரம், மார்ச் 13: மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் நகராட்சி சார்பில் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள 5 மொபைல் கழிப்பறை, 5 குடிநீர் தொட்டிகளை ஆணையர் சுவீதா ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் வந்து கடற்கரையில் தற்காலிக குடிசைகள் அமைத்து தங்கி உள்ள இருளர் மக்கள் பயன்படுத்தும் வகையில், கடற்கரையையொட்டி மாமல்லபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 5 மொபைல் கழிப்பறைகள், 5 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு, அதற்கு தேவையான தண்ணீர் லாரி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் சுவீதா ஸ்ரீமொபைல் கழிப்பறைகளை ஒவ்வொன்றாக திறந்து சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு, கழிப்பறையையும் சுத்தம் செய்வதற்கு 2 பேர் என சுழற்சி முறையில் தேவையான பணி ஆட்கள் இருக்க வேண்டும். கழிப்பறை எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும். குடிநீர் தொட்டிக்கு தேவையான குடிநீரை லாரிகள் மூலம் தடையின்றி நிரப்ப வேண்டும்.
குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும். யாரும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு, மாற்றாக மஞ்சபை மட்டுமே பயன்படுத்த சொல்ல வேண்டும். உடலுக்கு கேடு எற்படுத்தக்கூடிய லோக்கல் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். லோக்கல் குளிர்பானம் விற்பனை குறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post மாமல்லபுரம் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குடிநீர் தொட்டிகளை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.