அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். அதேபோல டங்ஸ்டன் தடுப்போம், மேலூரை காப்போம் என்ற வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அதிமுக உறுப்பினர்கள் அணிந்து வந்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிமுக, வி.சி.க. ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.

ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்: வேல்முருகன்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. ஆளுநர் செயலில் சந்தேகம் உள்ளதாக  குற்றச்சாட்டு வைத்தார். அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் ஆளுநர் பேச மறுப்பது ஏன்? என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

துணைவேந்தர் இல்லாததே காரணம்: ஈஸ்வரன்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு துணைவேந்தரை நியமிக்காததே காரணம் என கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை.யில் துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படாததற்கு யார் பொறுப்பு?என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்: மதிமுக

அண்ணா பல்கலை. விவகாரத்தில் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Related Stories: