சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக) கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், தற்போது வெறும் 371 பஞ்சாயத்துகள் மட்டும்தான் நகராட்சியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன, பேரூராட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இணைப்பதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எடுத்துக்கூறி, அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக எங்களுக்கு அனுப்பினால், எந்த ஊரை சேர்க்கலாம், எந்த ஊரை சேர்க்கக் கூடாது என்பது குறித்து முடிவு எடுக்கலாம். அதற்காக 120 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டிருக்கிறது. எந்தவொரு இடத்தையும், எந்தவொரு பகுதியையும் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு மக்கள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலமாக கிட்டத்தட்ட 2, 3 மாதங்களாக பல கூட்டங்கள் நடத்தி, ஆராயப்பட்டு, 371 பஞ்சாயத்துகள் மட்டும்தான் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும், உங்களுக்கு விரும்பம் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு தாருங்கள். அதுகுறித்து மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, முதல்வருடன் கலந்துபேசி, தக்க முடிவு எடுக்கப்படும்” என்றார்.
The post பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதில் பிரச்னை 120 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.