தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசுப் பள்ளியில் படித்து, தனது அயராத உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்தவர். அவருடைய வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற சிறப்புடன் செயல்பட்டவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்கு நீண்டகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்: இஸ்ரோ தலைவராக வரும் பொங்கல் நாள் முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வி.நாராயணன் பொறுப்பேற்க இருக்கிறார். இஸ்ரோவின் வெற்றிப் பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் தமது அரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார்கள். தற்போது தலைவர் பொறுப்பேற்கும் நாராயணனுடைய ஆளுமையில் இஸ்ரோ பணிகள் இன்னும் விரிவடைந்து உயர்வு பெறும் என நம்புகிறோம்.
பாமக தலைவர் அன்புமணி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் நாராயணனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளித் துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் புதிய தலைவரான நாராயணன் தலைமையில் புதிய உச்சங்களைத் தொடும் என்று நம்புகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானி நாராயணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா செலுத்தி வரும் ஆதிக்கம் மென்மேலும் தொடரவும், விஞ்ஞானிநாராயணன் தலைமையிலான இஸ்ரோ வியக்கத்தக்க சாதனைகள் பல புரியவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
The post இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.