தேசிய கீதத்தை முதலில் பாடுங்கள் என்று கோரிக்கை வைக்க கவர்னருக்கு எந்த உரிமையும் இல்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு

* அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை வாசிப்பது மட்டுமே கவர்னரின் ஜனநாயக கடமை
* தூர்தர்ஷன் மூலம் தனது உரையை வெட்டி, ஒட்டி வெளியிட முயற்சி செய்துள்ளார்

சென்னை: அமைச்சரவை எழுதிக் கொடுத்த தீர்மானத்தை வாசிப்பது மட்டும் தான் கவர்னரின் ஜனநாயக கடமை என்றும், தேசிய கீதத்தை முதலில் பாடுங்கள் என்று கோரிக்கை வைப்பதற்கு கவர்னருக்கு எந்த உரிமையும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 6ம்தேதி சட்டசபைக்கு உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் வந்து, அதை வாசிக்காமல் சென்றார். அதன்பிறகு, இதுதொடர்பாக, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். சற்று நேரத்தில் அதை நீக்கிவிட்டு வேறொரு கருத்தை பதிவிட்டார். பிறகு அதையும் நீக்கிவிட்டு மற்றொரு கருத்தை வெளியிட்டார். இவ்வாறு கருத்தை தெரிவிப்பதிலும் அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு இன்னும் உள்ளது.

1999ம் ஆண்டு முதல் கவர்னரின் உரையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷன் சேனலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, தூர்தர்ஷன் பிரசார்பாரதி என பெயர் மாறியுள்ளது. நாம் அவை நடவடிக்கையை ஒளிபரப்பு செய்வதற்காக ரூ.44 லட்சத்து 65 ஆயிரத்து 710 கொடுத்துள்ளோம். ஆனால், கடந்த முறை சென்னையில் உள்ள தூர்தர்ஷன் அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டபோது, ஓ.பி. வேன் (நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உதவும் வாகனம்) கிடைக்கவில்லை என்று கூறி தவிர்த்து விட்டார்கள். இதன் காரணமாக நேரடி ஒளிபரப்புக்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த ஓ.பி. வேன் குஜராத் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுவிட்டதாக பொதிகை டி.வி. அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்த முறை தூர்தர்சனுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், கடந்த 6ம் தேதி கவர்னர் உரையாற்ற வந்தபோது, தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ ஆகிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அனுமதி எதுவும் இல்லாமல் அவைக்குள் வந்து வீடியோ எடுத்தனர். 2 முறை நம்மிடம் பணம் வாங்கிவிட்டு, வர மறுத்தனர். அவர்களை யார் இயக்குகிறார்கள்?. இன்று சட்டப் பேரவைக்கு வந்து கெடுபிடி செய்கின்றனர். இப்போது, தமிழக அரசே டி.ஐ.பி.ஆர். (செய்தி மக்கள் தொடர்பு துறை) மூலம் அவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.

கேள்வி நேரம், முதல்வர் உரை, அமைச்சர்கள் உரை ஆகியவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அவை நடவடிக்கை முழுவதையும் ஒளிபரப்பு செய்யவேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். கவர்னர் தூர்தர்ஷன் மூலம் தனது உரையை பதிவு செய்து, அதை வெட்டி, ஒட்டி வெளியிட முயற்சி செய்துள்ளார். அதை கண்டுபிடித்து முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். கவர்னர் தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு தமிழக மக்களையும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் செயலாக செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிச்சயமாக, கவர்னர் இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 176 (1)-ன் படி, அமைச்சரவை எழுதிக் கொடுத்த தீர்மானத்தை வாசிப்பது மட்டும் தான் அவரது ஜனநாயக கடமை. அவர் தேசிய கீதத்தை முதலில் பாடுங்கள் என்று கோரிக்கை வைப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. சட்டப்படி நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கோரிக்கை வைத்து இவ்வாறு தாருங்கள் என்று கேட்பது முறையல்ல. சாதாரண மக்கள் எங்களுக்கு ரூ.1000 வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். கலைஞர் வீடு கட்டும் திட்டத்துக்கு கோரிக்கை வைக்கலாம். அரசியல் அமைப்பு சட்டம் சார்ந்த பேரவை விதிப்படி நடப்பதில் இவ்வாறு செய்யக்கூடாது என்பதை நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேசிய கீதத்தை முதலில் பாடுங்கள் என்று கோரிக்கை வைக்க கவர்னருக்கு எந்த உரிமையும் இல்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: