விண்ணப்பித்து விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் உரிமைத்தொகை தர நடவடிக்கை: பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேடச்சந்தூர் எம்எல்ஏ எஸ்.காந்திராஜன் (திமுக) பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது. மனு அளித்து, தகுதியுடைய நிலுவையில் உள்ள அனைவருக்கும் அந்தத் தொகையானது வழங்கப்படுமா? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கிட்டத்தட்ட 70 சதவீத விண்ணப்பங்கள், அதாவது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் முதற்கட்டமாக ஏற்கப்பட்டன.

இதில் முதன்முறையாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட மகளிர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூடுதலாக சுமார் 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி நிலவரப்படி, மாதம் ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஈ.ஆர்.ஈஸ்வரன்: தமிழ்நாட்டு பெண்களை தலைநிமிர வைத்த திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த உன்னதமான திட்டம் பல கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்திருக்கிறது. எனவே இந்த திட்டத்தில் பயனாளிகளுடைய எண்ணிக்கை உயர்த்தப்படுமா, இப்போது விண்ணப்பம் கொடுக்கின்ற தகுதியுள்ள பெண்கள் அத்தனை பேருக்குமே இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகையைக் கொடுக்க துணை முதல்வர் ஆவன செய்வாரா?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திருச்செங்கோட்டில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நாங்கள் ஆய்வுக்குச் செல்கின்ற நேரத்தில் என்னிடத்திலும், நம்முடைய அமைச்சர்களிடத்திலும், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அத்தனை மக்கள் பிரதிநிதிகளிடத்திலும் இந்த உரிமைத்தொகை வேண்டி மகளிர் விண்ணப்பம் கொடுக்கிறார்கள். இதுபற்றிய விவரங்களைச் சேகரித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். முதல்வரின் அறிவுரைகளை பெற்று, இதுவரை பயன்பெறாமல் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் உதவிகள் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் மகளிர் உரிமைத் தொகைக்காக கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள், புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கவும், 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

The post விண்ணப்பித்து விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் உரிமைத்தொகை தர நடவடிக்கை: பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: