‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த நடிகர் உருக்கம்: உண்மையான மனிதர் என்று புகழாரம்


புதுடெல்லி: ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த நடிகர் அனுபம் கெர், உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை, ஒவ்வொரு துறையை சேர்ந்த மக்களும் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி அவரது வாழ்க்கையை நினைவுகூர்கின்றனர். அதன்படி பாலிவுட் நடிகர் அனுபம் கெர், முன்னாள் பிரதமரின் மறைவு குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், தனது இரங்கல் செய்தியில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘டாக்டர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையுடன் ஒன்றரை ஆண்டுகள் கழித்துள்ளேன்.

அவருடன் அதிக நேரம் செலவிட்டேன். அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அவர் உடல் மொழி, நடத்தை குறித்து பல தகவல்களை அறிந்து கொண்டேன். மன்மோகன் சிங் மிகவும் இயல்பான மனிதர்; மிகவும் மென்மையானவர்; பிரகாசமானவர், சிறந்த புத்திசாலி மனிதர். மன்மோகனின் ஆளுமை குணங்களை ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் ஓரளவுக்கு உள்வாங்க முடிந்தது. முன்னதாக இந்த படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது, பல்வேறு காரணங்களுக்காக அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். அதுவும் அரசியல் காரணங்களுக்காக. அவரது கதாபாத்திரத்தில் நடித்தால், அவரை கேலி செய்து விடுவார்களா? என்பதற்காக அவ்வாறு செய்தேன். ஆனால் என் வாழ்க்கையில் மூன்று, நான்கு கதாபாத்திரங்களை உண்மையுடன் நடித்தேன் என்று சொன்னால், அதில் ஒன்று மன்மோகன் சிங்கின் கதாபாத்திரத்தை கூற முடியும்.

படத்தின் கருபொருள் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம்; ஆனால் அவர் அப்படியில்லை. நீல தலைப்பாகை அணிந்த அந்த மனிதரை இழந்துவிட்டோம். மிகவும் உண்மையான மனிதர் மற்றும் சிறந்த தலைவரை நாடு இழந்துள்ளது. மன்மோகனின் மிகப்பெரிய குணம் மற்றவர்கள் கூறுவதை கேட்கும் சக்தி. அவரது பதவிக்காலத்தில், சில விஷயங்கள் சர்ச்சைக்குரியவையாக இருந்தன. ஆனால் அவர் நேர்மையான நபராக இருந்தார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நிறைய உழைத்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நெகிழ்ந்த நடிகை சாய்ரா பானு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பாலிவுட் நடிகை சாய்ரா பானு, ஒரு புகைப்படத்துடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மவுனத்தின் ஒலியானது வார்த்தைகளை விட அதிகமாக எதிரொலிக்கிறது. டாக்டர் மன்மோகன் சிங் சிறந்த ஒரு அரசியல்வாதி; அவரது கண்ணியமும், அர்ப்பணிப்பும் ஒரு சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். ஆனால் அவரது வாழ்க்கை இந்திய வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கை திலீப் சஹாப் மற்றும் சுல்தான் பாய் (சுல்தான் அகமது) ஆகியோருடன் சந்தித்ததை என்னால் நினைவில் கொள்ள முடிகிறது.

திலீப் சஹாப் காரில் இருந்து வெளியே வந்தபோது, அவரை முன்னாள் பிரதமர் புன்னகையுடன் வரவேற்றதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அப்போது எனக்கு முன்னால் வந்த காட்சி எனது மனதைத் தொட்டது. பின்னர், நாங்கள் அவரது அறைக்குள் நுழைந்தபோது, திரைப்படங்களில் காணப்படுவது போல் சிறிய மேசையைச் சுற்றி ஒரு நாற்காலி மட்டுமே இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த நடிகர் உருக்கம்: உண்மையான மனிதர் என்று புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: