கடந்த 26ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 9.51 மணிக்கு காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு நேற்று நடந்தது.
தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் காங்கிரஸ் தலைமையகத்திற்கு காலை 8 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் சிங், அவரது 3 மகள்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து காலை 9.30 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும், மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரும், உறவினர்களும் பங்கேற்றனர். காலை 11.30 மணி அளவில் டெல்லி யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை இறுதி ஊர்வலம் வந்தடைந்தது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டு, முப்படை தளபதிகள், ராணுவ அதிகாரிகள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செய்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் டெல்லி முதல்வர் அடிஷி, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உள்ளிட்டோரும், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் தனஞ்சய் ராம்ஃபுல் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மன்மோகன் சிங் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி எடுக்கப்பட்டு சீக்கிய மத முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. இதில், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், மகள்கள், நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சடங்குகளைச் செய்தனர். பிற்பகல் 1 மணி அளவில் இறுதிச்சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. மூத்த மகள் உபிந்தர் சிங், மன்மோகன் சிங் உடலுக்கு எரியூட்டினார்.
* அமெரிக்க அதிபர் பைடன் புகழாரம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு பார்வையும், அரசியல் தைரியமும் இல்லாமல் இன்று அமெரிக்கா, இந்தியா இடையேயான முன்னோடியில்லாத அளவிலான ஒத்துழைப்புக்கு சாத்தியமில்லை.
அமெரிக்கா-இந்தியா இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது முதல் இந்தோ-பசிபிக் கூட்டாளர்களுக்கு இடையே குவாட் அமைப்பு தொடங்குவது வரையிலும் உதவியதன் மூலம் நமது நாடுகளையும் உலகையும் பல தலைமுறைகளாக தொடர்ந்து பலப்படுத்தும் பாதையை அவர் உருவாக்கினார். மன்மோகன் சிங் உண்மையான அரசியல்வாதி. அர்ப்பணிப்புள்ள பொதுத் தொண்டர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு கனிவான, அடக்கமான நபர். அவரது இழப்பு வருத்தம் அளிக்கிறது’’ என புகழாரம் சூட்டி உள்ளார்.
* மன்மோகன் சிங்கின் மனைவி மகள்களின் பின்னணி
மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் சிங், பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் கீர்த்தனை பாடகர் என பன்முக திறமை கொண்டவர். இவர்களது மூத்த மகள் உபிந்தர் சிங், வரலாற்று ஆசிரியர். அசோகா பல்கலைக்கழகத்தின் டீனாக பணியாற்றுகிறார். பண்டைய இந்திய வரலாறு, பண்டைய இந்திய மருத்துவம் குறித்து புத்தகங்களை எழுதியுள்ளார்.
2வது மகள் தமன் சிங் எழுத்தாளர். காடுகள் வளர்ப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பல புத்தகங்களை எழுதிய அவர், தனது பெற்றோரின் சுயசரிதையையும் புத்தகமாக்கி உள்ளார். கடைசி மகள் அம்ரித் சிங், அமெரிக்காவில் மனித உரிமைக்கான வழக்கறிஞராக பணியாற்றுகிறார். ஸ்டான்போர்ட் சட்டப் பள்ளியில் சட்ட துறை பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். யேல் சட்டப்பள்ளி, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெற்றுள்ளார்.
* அரைக்கம்பத்தில் பறந்த மொரீஷியஸ் தேசிய கொடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மொரீஷியஸ் நாட்டில் தேசியக் கொடி நேற்று முழுவதும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலமின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடியும், தனியார் இடங்களில் உள்ள மற்ற கொடிகளும் சூரிய அஸ்தமனம் வரையிலும் அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும்’ என உத்தரவிடப்பட்டிருந்தது.
மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு நடைபெறுவதையொட்டி பூடானில் பல இடங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மொரீஷியஸ், பூடான் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் அண்டை நாடுகள் உடனான உறவு வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.
The post 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்: அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் இறுதி மரியாதை appeared first on Dinakaran.