சிறை அதிகாரிகளின் வீடுகளில் கைதிகள் வேலை செய்கிறார்களா..? சிபிசிஐடி திடீர் சோதனை

வேலூர்: தமிழகம் முழுவதும் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் வீடுகளில் சிறை கைதிகள் வேலை செய்கிறார்களா என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவகுமார்(30), ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டு வேலைக்கு, சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்றபோது, வீட்டில் இருந்த பணம், பொருட்களை திருடியதாக, சிவகுமாரை சிறை வார்டன்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சிவகுமார் தாக்கப்பட்ட சம்பவ தொடர்பாக அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், சிவகுமார் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சிறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு, சிறை கைதிகளை பயன்படுத்த தடை விதித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஐஜி, சிறை எஸ்பி உட்பட 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் சிறை கைதிகளை, சிறைத்துறை அதிகாரிகள் தங்களுடைய வீடு மற்றும் வெளிதோட்டத்தில் வேலை செய்கின்றாரா? என சோதனை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வேலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் டிஐஜி, சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் வீடுகளில், கைதிகள் வேலை செய்கிறார்களா என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மேலும், சிறைத்துறை டிஐஜி முகாம் அலுவலகத்திலும் இச்சோதனை நடந்தது. இதேபோல், தமிழகத்தில் உள்ள மற்ற மத்திய சிறையிலும் சோதனை நடந்தது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அதிகாரிகள், தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வீட்டில் வேலைக்கு பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இச்சோதனை தொடர்ச்சியாக நடக்கும்’ என்றனர்.

The post சிறை அதிகாரிகளின் வீடுகளில் கைதிகள் வேலை செய்கிறார்களா..? சிபிசிஐடி திடீர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: