மாணவி பாலியல் சம்பவத்தில் எப்ஐஆர் வெளியான விவகாரம்; குற்றவியல் சட்டத்திற்கு மாற்றுவதில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறால் எப்.ஐ.ஆர் கசிந்தது: தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான எப்ஐஆர் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவியின் பெயர், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்டவை அந்த எப்ஐஆர்-ல் இடம் பெற்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் தனது கண்டனத்தை தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, முதல் தகவல் அறிக்கை லாக் ஆவதில் தாமதமானதாகவும், அந்த தாமதமான நேரத்தில் ஒரு சிலர் பார்த்து, பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், அல்லது புகார்தாரர்கள், குற்றவாளி தரப்புக்கு அளிக்கப்பட்ட நகல் மூலமாகவும் லீக் ஆகியிருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிசியில் (இன்டியன் பீனல் கோட்) இருந்து பிஎன்எஸ் (பாரதீய நியான சன்ஹிதா) குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எப்ஐஆர் கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தகவல் மையம் அளித்த பதில் விவரம்:
தேசிய தகவல் மையத்தில் எப்ஐஆரை பார்வையிடும் வசதி குறிப்பிட்ட சில பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்போது தானாகவே பிளாக் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 64, 67, 68, 70, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் எப்ஐஆரை பார்க்கும் வசதி எஸ்சிஆர்பி கொடுத்த வழிகாட்டுதலின்படி முடக்கப்பட்டிருக்கிறது. மாணவி வழக்கு குறித்து பதியப்பட்ட, எப்ஐஆரை ஐபிசியில் இருந்து பிஎன்எஸ் குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தகவல் கசிந்து இருக்கலாம்.

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எப்ஐஆர் எப்படி வெளியானது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். மேலும் முக்கிய வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளின் எப்ஐஆர்களை பார்வையிடுவதை முடக்குவது குறித்து மீண்டும், தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய எஸ்சிஆர்பி குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

The post மாணவி பாலியல் சம்பவத்தில் எப்ஐஆர் வெளியான விவகாரம்; குற்றவியல் சட்டத்திற்கு மாற்றுவதில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறால் எப்.ஐ.ஆர் கசிந்தது: தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில் appeared first on Dinakaran.

Related Stories: