அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை நீக்க எக்ஸ் தளத்துக்கு பாஜ அரசு வலியுறுத்தல்: காங்கிரஸ் தகவல்

புதுடெல்லி: அம்பேத்கர் பற்றி ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சை நீக்க கோரி எக்ஸ் தளத்துக்கு பாஜ அரசு வலியுறுத்தியுள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் தெரிவித்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நேற்று கூறுகையில்,‘‘ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டார். இந்த விவகாரத்திற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்.

சமூக வலைதளத்தில் பகிர்ந்த அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சை நீக்க ஒன்றிய அரசு கேட்டு கொண்டதாக காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு எக்ஸ் தளத்தில் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. எப்படி இருந்தாலும், பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் எக்ஸ் தளம் அதை நீக்க மறுத்துவிட்டது. தனது பேச்சில் எந்த தவறும் இல்லை என்று நினைத்தால், அதை நீக்குமாறு அவரது அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திடம் ஏன் கேட்க வேண்டும்.

தாங்கள் பகிர்ந்து கொண்டது ஷாவின் அசல் பேச்சு ஆகும். அது திருத்தப்படவோ அல்லது திரிக்கப்படவோ இல்லை. அவர் ஆற்றிய உரையின் 34 பக்கங்கள் கொண்ட திருத்தப்படாத உரை மாநிலங்களவை இணையதளத்தில் உள்ளது. அமித் ஷாவின் பேச்சு அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்திலும் மோசமான எண்ணம் கொண்டதாகவும் உள்ளது.

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை தங்கள் கைகளில் வைத்திருந்தனர். ஆனால், பாஜ தனது சமூக வலைதள பக்கத்தில் அம்பேத்கரின் படத்துக்கு பதிலாக தேசத்துக்கு விரோதமானவர் என்று அவர்கள் கூறும் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் படத்தை வைத்து கிண்டலடித்துள்ளனர்’’ என்றார்.

The post அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை நீக்க எக்ஸ் தளத்துக்கு பாஜ அரசு வலியுறுத்தல்: காங்கிரஸ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: