மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்பு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும்: கேரள காவல்துறை வேண்டுகோள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல கால பூஜைகள் தொடங்கிய கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 35 நாட்களில் 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைனில் இடம் கிடைக்காதவர்கள் சபரிமலைக்கு வந்து உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஒரு சில நாட்களில் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருப்பதாலும், விடுமுறை நாட்கள் வருவதாலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க தேவசம் போர்டு மற்றும் கேரள காவல்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜீதா பேகம் கூறியது: சபரிமலையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனால் நெரிசல் மூலம் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மண்டல பூஜை மற்றும் விடுமுறை நாட்கள் நெருங்குவதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். இதனால் எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர முயற்சிக்க வேண்டும் என்றார்.

The post மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்பு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும்: கேரள காவல்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: