கேரளாவில் இயற்கை பேரிடரில் மக்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு ரூ.132 கோடி: ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இயற்கை பேரிடர்களில் மக்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு ரூ.132.62 கோடி பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கூறிய ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை.
நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான விவசாய நிலங்கள் சேதமடைந்தன.

நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய கிராமங்களில் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டது. இத்தகைய பேரழிவு நடந்த போதிலும் ஒன்றிய அரசு இதுவரை கேரளாவுக்கு நிவாரண நிதி எதுவும் ஒதுக்கவில்லை.
இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேரள அரசிடம் ஒன்றிய அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடங்களில் கேரளாவில் ஏற்பட்ட பேரிடர்களில் மக்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு ரூ.132.62 கோடியை உடனே செலுத்துமாறு கோரி கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் தான் இதற்கு முன்பு நடைபெற்ற பேரிடர்களில் ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கான பணத்தை கேட்பதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

The post கேரளாவில் இயற்கை பேரிடரில் மக்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு ரூ.132 கோடி: ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: