பெஞ்சல் புயலால் மழை கொட்டி தீர்த்தபோதும் வறண்டு கிடக்கும் 60 ஏரிகள்

*நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு

சேலம் : பெஞ்சல் புயலால் சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்தும் பனமரத்துப்பட்டி, அ.நாட்டாமங்கலம் உள்ளிட்ட 60 ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரிகளுக்கு வரும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 3 நீர்நிலைகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 276 நீர்நிலைகளும், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 44 நீர்நிலைகளும், பொதுபணித்துறை (மேட்டூர் அணைக்கோட்டம்) கட்டுப்பாட்டில் 18 நீர்நிலைகளும், ெபாதுப்பணித்துறை சரபங்கா கட்டுப்பாட்டில் 89 நீர்நிலைகளும் என மொத்தம் 430 நீர்நிலைகள் உள்ளன.

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் மாநகராட்சியில் குமரகிரி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கன்னங்குறிச்சி பேரூராட்சியில் உள்ள புதுஏரி முழுக்கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. அதேபோல் சேலத்தாம்பட்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அல்லிக்குட்டை ஏரி,பள்ளப்பட்டி ஏரி, அம்பாள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி, குருவிபனை ஏரி, எருமாபாளையம் உள்ளிட்ட ஏரிகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளது.

மூக்கனேரியில் பணிகள் நடப்பதால் ஏரிக்கு வரும் தண்ணீர் திருமணிமுத்தாற்றில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏரி நிரம்பவில்லை. சேலம் மாவட்டத்தில் 65 ஏரிகள் முழு கொள்ளளவும், 70 ஏரிகள் 75 சதவீதமும், 165 ஏரிகள் 50 சதவீதமும், 70 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் கீழும், 60 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டும் காணப்படுகிறது.

குறிப்பாக சேலத்தில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பனமரத்துப்பட்டி ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. அயோத்தியாப்பட்டணம் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் பகுதியில் உள்ள ஏரிக்கும் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதேபோல் பல ஏரிகளுக்கு வரும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு இருப்பதால் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுவது விவசாயிகள் மத்தியில் கவலையை அளித்துள்ளது.

இது குறித்து திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தங்கராஜ் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வடகிழக்கு பருவமழையை காட்டிலும் ெதன்மேற்கு பருவமழை நல்லமுறையில் கைகொடுத்து வருகிறது. தற்போது பெஞ்சல் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை நல்லமுறையில் பெய்துள்ளது. மாவட்டத்தில் மற்ற பகுதிகளை காட்டிலும் ஏற்காட்டில் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் வழிந்தோடிய மழைநீர் திருமணிமுத்தாற்றில் கலந்தது.

திருமணிமுத்தாற்றையொட்டியுள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரிகள் நிரம்பியுள்ளது. அதேபோல் வனம் மற்றும் மலைகளையொட்டியுள்ள பல ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரிகள் நிரம்பி காணப்படுகிறது. ஆனால் இவ்வளவு மழை பெய்தும் 60க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

குறிப்பாக சேலத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் பனமரத்துப்பட்டி ஏரிக்கு நீர் வருவதே இல்லை. இந்த ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதையில் தடுப்பணை மற்றும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல் அயோத்தியாப்பட்டணம் நாட்டாமங்கலம் ஏரிக்கு ஏற்காடு மலைப்பாதையில் வழிந்தோடும் நீர் வரும்.

இந்த ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல ஏரிகளுக்கு வரும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகள் உள்ளன.இவ்வாறு ஏரிக்கு நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை எவ்வித தயக்கமின்றியும் அகற்றினால்தான் எதிர்வரும் காலத்தில் நீர்வரத்து இருக்கும். நீர் வரத்து இருந்தால் மட்டுமே அப்பகுதிகளில் விவசாயம் செழிக்கும். இதற்கு அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post பெஞ்சல் புயலால் மழை கொட்டி தீர்த்தபோதும் வறண்டு கிடக்கும் 60 ஏரிகள் appeared first on Dinakaran.

Related Stories: