சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை கூடுதலாக உருவாக்கி, வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட வேண்டும். இதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு, பயிற்சி மருத்துவம் பெற தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும்.
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தற்காலிக தகுதிச் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளிலும் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் காலதாமதம் செய்கிறது. இத்தகைய மருத்துவர் மாணவர் விரோத அலட்சியப் போக்கை தமிழ்நாடு மருத்துவ கவுன்வில் கைவிட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிடாத வகையில் இப்பட்டதாரிகளிடம் ஒரு கட்டாய உத்தரவாத படிவத்தில் வற்புறுத்தி கையொப்பம் பெறும் போக்கு உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
அந்தப் படிவத்தில் உள்ள நிபந்தனைகளை மாணவர்கள் படித்திடவும் அனுமதிப்பதில்லை என தெரிவிக்கின்றனர். இந்தப் போக்கை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு விடுதி வசதிகளை வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கிடவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணாக்கர்களுக்கு உதவிட, தேசிய அளவிலும் மாநில அளவிலும் “உதவி மையங்களை” உருவாக்கிட வேண்டும் என ஒன்றிய அரசையும் மாநில அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
