சென்னை : சென்னை சங்கமத்தில் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து, தமிழர் திருநாளையொட்டி நாளை தொடங்கவிருக்கும் ‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,” சென்னை சங்கமத்தில் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
வடசென்னையில் ராயபுரம், கொளத்தூர், ஆவடி உள்ளிட்ட 20 பகுதிகளில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பெரம்பூர் பூங்காவில் பணிகள் நடைபெறுவதால் அங்கு சங்கமம் நிகழ்வை நடத்த முடியவில்லை. அடுத்தாண்டு அதிக இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சென்னை சங்கமத்தில் பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சி நடத்தச் செல்கிறார்கள். 2,500 கிராமிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
6 மாநிலங்களைச் சேர்ந்த கலைக் குழுக்கள் சென்னை சங்கமத்தில் பங்கேற்கின்றனர். உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும். சங்கமம் நிகழ்ச்சிக்குப் பிறகு கிராமிய கலைஞர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று கலையை வளர்க்கின்றனர். “இவ்வாறு தெரிவித்தார்.
