வடலூர் : குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வட்டாட்சியர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், துணை வட்டாட்சியர்கள் சிவசக்தி வேல்,ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் கோட்டாட்சியர் சுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து புதிய மண்பானையில் பொங்கல் வைத்தும், பானை உடைக்கும் போட்டி,கோலப்போட்டி உள்ளிட்டவை வைத்து சமத்துவ பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
இதில் வருவாய் ஆய்வாளர்கள் சிவபெருமாள், ஷீலா தேவி,கிராம நிர்வாக அலுவலர்கள் பழனிவேல், துரைராஜ், சந்திரவதனன்,சுதாகர், கிராம உதவியாளர்கள் ஞானவேல், சபரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
