சென்னையில் கூட்டுறவு சங்கம் சார்பில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: இன்று முதல் பொதுமக்கள் வாங்க ஏற்பாடு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு துறை சார்பில் சென்னையில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் குறைந்த விலையில் இன்று முதல் பட்டாசு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, கூட்டுறவு பண்டக சாலைகள், தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைத்துள்ளன. தீவுத்திடலில் மொத்தமாக பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது தவிர சென்னையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுதவிர நேரடியாக சிவகாசியில் இருந்தும் பட்டாசு வியாபாரிகள் சென்னையில் பட்டாசு கடைகள் வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் டியுசிஎஸ் கூட்டுறவு சங்கம் மூலம் தனியார் கடைகளை விட குறைந்த விலையில் பட்டாசு கடைகள் அமைத்துள்ளனர்.

இந்த கடைகளில் பொதுமக்கள் இன்று முதல் பட்டாசுகள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டியுசிஎஸ்) சார்பில், தேனாம்பேட்டை காமதேனு வளாகம், அடையாறு, பெசன்ட் நகர், வேளச்சேரி, சாலிகிராமம், ஆர்.ஏ.புரம், திருவல்லிக்கேணி, பெரியார் நகர் மற்றும் சென்னை தீவுத்திடல் ஆகிய 9 இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில், பல்லாவரம், குரோம்பேட்டை, கிழக்கு தாம்பரம், செம்பாக்கம், மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடு, ஆலந்தூர், போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பட்டாசு கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இவற்றில், இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது. பட்டாசு விற்பனையில் முறைகேட்டை தடுக்க, ஒவ்வொரு கடையில் நடக்கும் விற்பனையும் கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும். அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து டியுசிஎஸ் கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் தரமாக பட்டாசுகள் விற்பனை செய்யப்படும். அதாவது, மற்ற தனியார் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கும் பட்டாசுகளை கூட்டுறவு சங்க பட்டாசு கடைகளில் ரூ.700 முதல் ரூ.750க்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கூட்டுறவு கடைகள் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகிறார்கள். அதை பின்பற்றி இந்த ஆண்டும் பட்டாசு கடை அமைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post சென்னையில் கூட்டுறவு சங்கம் சார்பில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: இன்று முதல் பொதுமக்கள் வாங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: