இதேபோன்று, சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரை, பாலவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளையும் மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதனால் சென்னை கடற்கரைகளுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சென்னையின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த கடற்கரை விளங்குவதால், திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டை குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலக அளவில் அழகிய, சுத்தமான கடற்கரைகளை தேர்வு செய்து இந்த நீலக்கொடி தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த, சுற்றுச்சூழல் மிக்க, கடல்சார் சூழலியைப் பேணிக் காக்கும் அழகிய கடற்கரைகளை தேர்வு செய்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் சுற்றுச்சூழல் மேலாண்மை, நீரின் தரம், நீல நிறம், பாதுகாப்பு, குளிக்க தகுந்த சுகாதாரமான நீர் உள்ளிட்ட 33 அம்சங்களை கொண்டு வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் பெற்றால் அந்த கடற்கரை உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என்பது பொருள்படும். அதன் அடிப்படையில், இந்தியாவில் 10 கடற்கரைகளுக்கு இந்த நீலக் கொடி தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பட்டியலில் சென்னை மெரினா கடற்கரையும் இணையவுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை, புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரையும் இந்த நீலக்கொடி தரச்சான்றிதழை ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால், தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக கோவளம் கடற்கரை மட்டுமே உள்ளது.
இந்த வரிசையில், சென்னை மெரினா கடற்கரை இந்த நீலக்கொடி தரச்சான்றிதழை பெறுவதற்கான தகுதிகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்களின், ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி பார்த்தால், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரை, புகழ்பெற்ற நீலக் கொடி சான்றிதழை பெற உள்ளது. இதை செயல்படுத்துவதற்கான டெண்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை நீலக் கொடி சான்றிதழ் பெறுவது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியால், செயல்படுத்தப்பட்ட நிலையில் 2024ம் ஆண்டில் பல மண்டலங்களில் கடற்கரைகளுக்கான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது.
இதில்தான் புதிதாக பல கடற்கரைகள் தொடங்கப்பட உள்ளன. மெரினா கடற்கரையை பொறுத்தவரை நீலக்கொடி கடற்கரை திட்டத்திற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள தற்போது சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும். மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரையிலான பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளதால் இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் பாரம்பரியம் சார்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்தபின்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேேபான்று, எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்படும் அங்கே புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் நீலக்கொடி சான்றிதழ் பெற தயாராகும் மெரினா கடற்கரை: டெண்டர் வெளியிட்டது மாநகராட்சி appeared first on Dinakaran.