திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. கடந்த சில தினங்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்து இருந்தது. இந்தநிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் இன்று முதல் 3 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும், நாளை கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் இடி, மின்னலும் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை appeared first on Dinakaran.