×

சோலார், காற்றாலை இயந்திரங்கள் ஏற்றுமதியில் முறைகேடு; ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: ஏற்றுமதியில் பல கோடி முறைகேடு நடந்ததாக சோலார் மற்றும் காற்றாலை இயந்திரங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒபிஜி மற்றும் பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு ஒபிஜி பவர் அண்ட் இன்ப்ரா ஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் பி.விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சூரிய மின்சாரத்திற்கு தேவையான சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு இயந்திரங்கள் ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் கணக்கு காட்டாமல் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை ஒபிஜி மற்றும் பி.விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைமை அலுவலகம் சென்னை, செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 15 இடங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் நேற்று ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த தனியார் மின்சாரம் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவன அதிகாரி வீட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவு வரை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதேபோல் ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அரவிந்த் குப்தா என்ற தொழிலதிபரின் வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தேனாம்பேட்டை கே.பி.தாஸ் சாலையில் உள்ள அடுக்குமாடியில் வசித்து வரும் சோலார் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் கவுசிக் என்பவரின் வீட்டிலும் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

சைதாப்பேட்டை-சின்னமலை எல்டிஜி சாலையில் உள்ள ஒபிஜி பவர் அண்ட் இன்ப்ரா ஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். மேலும், செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காற்றாலை மின்சாரம் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் சோதனை நடந்தது. கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் ஒரு தனியார் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் உற்பத்தி தொழிற்சாலையிலும் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ததில் பல நூறு கோடி ரூபாய் வரை ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், பங்கு பத்திரங்கள், கணினி, ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் சோதனை நடத்தப்படும் 2 தனியார் நிறுவனங்கள் எத்தனை கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளனர் என்று தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சோலார், காற்றாலை இயந்திரங்கள் ஏற்றுமதியில் முறைகேடு; ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : OBG, P. Enforcement ,Chennai ,OPG ,BP ,Maharashtra ,OPG, P. Enforcement ,Dinakaran ,
× RELATED ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை