ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 6ம் தேதி இரவு சென்ற ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவிற்கு கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஓட்டல் ஊழியர் சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), பெருமாள் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆசைதம்பி, முருகன், பாஜ மாநில தொழில்துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், ஜெய்சங்கர் ஆகியோரும் பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 8 பேரும் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 22ம்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் 10 நாள் அவகாசம் கோரி கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் ஆசைதம்பி, ஜெய்சங்கர், முருகன் கடந்த 23ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மே 2ம்தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக தி.நகரில் வைத்து நயினார் நாகேந்திரனிடம் 2வது சம்மன் வழங்கப்பட்டது. மணிகண்டனுக்கு தபால் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. மே 2ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜராகி எழுத்து பூர்வ பதிலளிப்பார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை தாம்பரம் காவல் நிலையம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி நேற்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன், ஆய்வாளர் லோகநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரிக்க உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த தகவல்களையும், வழக்கு தொடர்பான ஆவணங்களையும் நாளை ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதன்பிறகு சிபிசிஐடி போலீசார் உடனடியாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: