தூத்துக்குடியில் நீட் தேர்விற்கு ஒரே மையத்தில் 2 விதமாக கேள்வித்தாள்கள்

*மாணவர்கள் குழப்பம் – கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடந்த நீட் தேர்வில் ஒரே மையத்தில் இரண்டு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் நடந்த நீட் தேர்வில் சுமார் 760 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் கேள்விகளை பகிர்ந்து கொண்ட போது, அந்த மையத்தில் இரண்டு விதமான கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிலருக்கு க்யூ.ஆர்.எஸ்.டி வரிசையில் கேள்வித்தாள்களும், சிலருக்கு எம்.என்.ஓ.பி வரிசையில் கேள்வித்தாள்களும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவ, மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் பல இடங்களில் விசாரித்த போது தூத்துக்குடி மையத்தில் மட்டுமே இரண்டு விதமான கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டு இருந்ததாக தகவல் கிடைத்தது. மற்ற அனைத்து இடங்களிலும் க்யூ.ஆர்.எஸ்.டி வரிசையிலான கேள்வித்தாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அழகர் பள்ளி மையத்தில் மட்டும் எம்.என்.ஓ.பி என்ற வரிசை கொண்ட கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு இருந்ததால் எம்.என்.ஓ.பி கேள்வித்தாள் மூலம் விடை எழுதிய மாணவர்கள் தங்கள் நிலை என்னாகும் என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று வெளியான ஆன்சர் கீயில் க்யூ.ஆர்.எஸ்.டி வரிசையிலான கேள்வித்தாள்களுக்கு மட்டுமே விடைகள் கொடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எம்.என்.ஓ.பி வரிசையில் தேர்வு எழுதிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் மேலும் குழப்பமடைந்தனர். இதையடுத்து எம்.என்.ஓ.பி வரிசையில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். இதுகுறித்து தேர்வெழுதிய மாணவி மதுஸ்ரீ கூறுகையில், எப்போதுமே ஒரே விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்படும். ஆனால் நேற்று முன்தினம் ஒரே மையத்தில் இரண்டு விதமான கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் க்யூ.ஆர்.எஸ்.டி.கேள்வித்தாள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும்தான் ஆன்சர் கீ வந்துள்ளது.

எம்.என்.ஓ.பி கேள்வித்தாள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு ஆன்சர் கீ வரவில்லை. இதனால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே எம்.என்.ஓ.பி வரிசையில் தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக கட் ஆப் மார்க் வழங்க வேண்டும், என்றார்.

மாணவி கிப்டி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மற்ற இரண்டு மையங்களிலும் க்யூ.ஆர்.எஸ்.டி வரிசையிலான கேள்வித்தாள்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அழகர் பள்ளி மையத்தில் மட்டும் இரண்டு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் க்யூ.ஆர்.எஸ்.டி கேள்வித்தாளில் 38 பக்கங்களும், எம்.என்.ஒ.பி கேள்வித்தாளில் 28 பக்கங்கள் மட்டுமே இருந்தது.

மேலும் க்யூ.ஆர்.எஸ்.டி கேள்வி தாள் மிக எளிமையாக உள்ளது. எம்.என்.ஓ.பி கேள்வித்தாள் கடினமாக இருந்தது. இந்த குழப்பத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை எம்.என்.ஓ.பி வரிசையில் தேர்வு எழுதிய எங்களுக்கு தனியாக கட் ஆப் மதிப்பெண் வழங்க வேண்டும், என்றார்.நீட் தேர்வில் நடந்த இந்த கேள்வித்தாள் குழப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தூத்துக்குடியில் நீட் தேர்விற்கு ஒரே மையத்தில் 2 விதமாக கேள்வித்தாள்கள் appeared first on Dinakaran.

Related Stories: