ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் மேடு பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோவையில் இருந்து சேலம் நோக்கி செஜ்ஜில்லா அபிஷிக் என்ற பெயரில் தங்க நகைகளை ஏற்றிச் செல்லும் தனியாருக்கு சொந்தமான சரக்கு வாகனம் ஒன்று நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்த போது பலத்த கனமழை மற்றும் காற்றின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தங்க நகைகளை எடுத்து வந்த வாகனத்தின் ஓட்டுநர் சசிகுமார், பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார், படுகாயமடைந்த 2 பேரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 666 கோடி ரூபாய் மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகள் கோவையில் இருந்து சேலம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

பின்னர், 666 கோடி மதிப்பிலான தங்க நகைகளோடு வேனை அப்புறப்படுத்தி காவல்நிலையத்திற்கு பாதுகாப்புடன் போலீசார் எடுத்துச் சென்றனர். இதையடுத்து, வணிகவரித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க நகைகளை மாற்று வாகனம் வரவழைத்து சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கோவை – சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: