டாப்சிலிப்பில் கடும் வறட்சி கோழிக்கமுத்தி முகாமிலிருந்து 20 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டது

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி (டாப்சிலிப்) அமராவதி, உடுமலை, மானாம்பள்ளி ஆகிய 6 வன சரகங்கள் உள்ளன. இங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும் பயணிகள் வனப்பகுதியை ரசித்து செல்கின்றனர். மேலும், ஆங்காங்கே சுற்றித்திறியும் வனவிலங்குகளை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஆண்டு (2023) பருவமழை சில மாதமாக அவ்வப்போது பெய்தது. இதனால், கடந்த ஜனவரி மாதம் வரையிலும், வனப்பகுதி செழிப்புடன் பச்சை பசேல் என இருந்துள்ளது. அதன்பின் பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து, மழையின்றி வனப்பகுதியில் உள்ள நீரோடை மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் வற்ற துவங்கியது.

அதிலும் கடந்த மூன்று மாதமாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், தற்போது வனத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் யானை உள்ளிட்ட விலங்குகள் நீர் நிலைகளை தேடி இடம் பெயர்கிறது. இதில் எப்போதும் பசுமையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், டாப்சிலிப் பகுதியில் உள்ள நீரோடைகளிலும் தண்ணீர் வற்றியுள்ளது.

இதில், டாப்சிலிப்பில் அடர்ந்த வனப்பகுதியான கோழிக்கமுத்தி வழியாக செல்லும் நீரோடையருகே அமைக்கப்பட்டுள்ள முகாமில், வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கோழிக்கமுத்தி முகாம் வழியாக செல்லும் நீரோடையில் தண்ணீர் மிகவும் வற்றி பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், யானைகளுக்கு போதிய தண்ணீர் வசதி வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, கோழிக்கமுத்தி முகாமில் உள்ள குறிப்பிட்ட யானைகளை, டாப்சிலிப் வனத்திற்குட்பட்ட பகுதியில், தண்ணீர் வரும் நீரோடையருகே உள்ள பகுதியில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கோழிக்கமுத்தி முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளில் 20 யானைகள், வரகளியாறு, மானாம்பள்ளி மற்றும் சின்னாறு ஆகிய தற்காலிக முகாம் பகுதிகளில் இடமாற்றம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

டாப்சிலிப் பகுதியில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்ட போது, கோழிக்கமுத்தி முகாமிலிருந்து சுமார் 25 யானைகள் 3 மாதத்திற்கு மேலாக, இடமாற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. அதுபோல், நடப்பாண்டில் கோழிக்கமுத்தி பகுதியில் வறட்சி கடுமையாக துவங்கியுள்ளதால், இந்த முகாமிலிருந்து 20 யானைகள் இடமாற்றம் செய்து பராமரிப்படுகிறது.
இதையொட்டி, யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் கோழிக்கமுத்தி முகாமில் நடக்கும், பாகன்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணி நிலைமை விரைந்து சீராவதுடன், மழை பெய்து வறட்சி குறைந்தவுடன் சின்னார், வரகளியாறு, மானாம்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட யானைகள் அனைத்தும், கோழிக்கமுத்தி முகாமிற்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post டாப்சிலிப்பில் கடும் வறட்சி கோழிக்கமுத்தி முகாமிலிருந்து 20 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: