தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது இன்று முதல் 30ம் தேதி வரை 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: கன்னியாகுமரி, நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வெப்ப அலை வீசிவருகிறது. இந்நிலையில், நேற்று தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை இருந்தது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரைஅதிகமாக இருந்தது.

9 இடங்களில் நேற்று 104 முதல் 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. ஈரோடு, வேலூர் பகுதிகளில் 108 டிகிரி வெயில் இருந்தாலும் வெப்ப அளவு 110 டிகிரி வரை உணரப்பட்டது. திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தி, தர்மபுரி, திருத்தணி, நாமக்கல்லில் 106 டிகிரி பதிவானது. இதர மாவட்டங்களில் 102 முதல் 104 டிகிரி வரை வெயில் இருந்தது. கடலோரப் பகுதிகளில் 100 டிகிரி வரை வெயில் இருந்தது.
இந்நிலையில் தமிழகப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நீடித்து வருவதால் இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். மேலும் இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் அலர்ட் விடப்பட்டது.

இதையடுத்து, 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை ஒடிசாவின் சில பகுதிகள், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும்.  தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 28ம் தேதி வரை லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது இன்று முதல் 30ம் தேதி வரை 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: கன்னியாகுமரி, நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: